பொதுஜன முஸ்லிம் பிரமுகர்கள் அறிவித்தது போன்று, ஜனாஸா தொடர்பான வர்த்தமானி இன்னும் ஏன் வெளிவரவில்லை? - அசாத் சாலி கேள்வி! - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

பொதுஜன முஸ்லிம் பிரமுகர்கள் அறிவித்தது போன்று, ஜனாஸா தொடர்பான வர்த்தமானி இன்னும் ஏன் வெளிவரவில்லை? - அசாத் சாலி கேள்வி!

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுவது தொடர்பில், அரசாங்கம் மீள்பரிசீலனை செய்து, அடக்குவது குறித்த நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமென பொதுஜன பெரமுன பிரமுகர் நகீப் மௌலானா கூறி பல மாதங்கள் கடந்த நிலையிலும், இன்னும் ஜனாஸாக்களை எரியூட்டுவது தொடர்வதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காகவா நகீப் மௌலானா இவ்வாறான கருத்தை வெளியிட்டார்? என கேள்வியெழுப்பிய அசாத் சாலி, அவ்வாறான ஒரு எண்ணம் அரசுக்கு இருந்ததா என்பதை மௌலானா தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியதாவது, "வக்கிரப் போக்குடனேயே அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன. கொரோனா என உறுதிப்படுத்தப்படாதவர்களின் மரணங்களும் கொரோனா எனக் கூறி எரியூட்டப்படுகின்றன.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது, கொரோனா பரிசோதனையின் அறிகுறிகள் இல்லையென சான்றிதழ் வழங்கப்பட்டவர்களுக்கு, தனிமைப்படுத்தல் காலத்தில் திடீரென நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். இந்த வகையிலேயே, இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய புற்றுநோயாளியான முஸ்லிம் பெண்மணி, வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவர் இறந்தார்.

தனது கணவனுடன் செல்ல வேண்டுமென அவர் கூறிய போதும், அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பயமும் ஏக்கமும் ஏற்பட்டு அவர் இறந்ததாக உறவினர்கள் கூறினர். இப்போது அவரது மரணம் தொடர்பில் கிடைத்த மருத்துவச் சான்றிதழில் 'இதயத்தாக்கு' என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, வெளிநாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லிம் நபர் ஒருவரும் இவ்வாறு, வேறு காரணங்களால் இறந்த போதும், கொரோனா எனக் கூறி. எரியூட்டப்பட்டிருக்கின்றார். இவ்வாறு இந்த அநியாயம் தொடர்கதையாகவே செல்கின்றது.

மாடறுப்பு விவகாரத்தை முஸ்லிம்கள் பெரிதுபடுத்தாமல் இருந்த போதும், பெரும்பான்மை சமூகம் அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததனால், அரசாங்கம் அந்த எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காகவே அதனை சிறிதுகாலம் தள்ளிப்போட்டுள்ளது. எனினும், இந்தியப் பிரதமர் மோடியையும் கடும்போக்குவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்காக, அரசு முஸ்லிம்களுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்யும்" என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment