எஸ்.பி.பி. சுகம் பெற்று மீண்டும் பாட வேண்டும் என்பதே இலங்கை வாழ் சகல மக்களதும் விருப்பமாகும் - நலம் நலம் பெற எஸ்.பி.பி. நிகழ்வில் என்.எம். அமீன் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

எஸ்.பி.பி. சுகம் பெற்று மீண்டும் பாட வேண்டும் என்பதே இலங்கை வாழ் சகல மக்களதும் விருப்பமாகும் - நலம் நலம் பெற எஸ்.பி.பி. நிகழ்வில் என்.எம். அமீன் தெரிவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

உலகப் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் முழுமையாக குணம் பெற்று மீண்டும் பாட வேண்டும் என்பது இலங்கை வாழ் சகல மக்களதும் விருப்பமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.

கலைநிலா கலாமன்றம் நலம் நலம் பெற எஸ்.பி.பி. என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன 6ஆவது கலையகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சிகலைநிலா கலாமன்றத் தலைவர் கலைஞர் எஸ்.எம். உவைஸ் ஷரீபினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எஸ்.பி.பி. விரைவில் சுகம் காண வேண்டும் என்ற நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், பல உள்ளூர் கலைஞர்கள் எஸ்.பி.பி.யின் பாடல்களைப் பாடினர். கவிஞர்கள், கலைஞர்கள், பாடகர்கள், மற்றும் வத்தகரப் பிரமுகர்கள் பலரும் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அங்கு தொடர்ந்து பேசிய என்.எம்.அமீன் கூறியதாவது, எஸ்.பி.பி. (S.P.B.) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

பெரிய ரசிகர் என்றாலும் சரி, சிறிய ரசிகர் என்றாலும் சரி, யார் ஆட்டோகிராஃப் கேட்டாலும் முகம் சுளிக்காமல் போட்டு கொடுப்பாராம், எஸ்.பி.பி. இளகிய மனம் கொண்ட எஸ்.பி.பி, தம்மிடம் உதவி என்று யாரும் கேட்டு வந்தாலும் மறுக்காமல் தம்மால் முடிந்த உதவியை செய்து கொடுப்பாராம். ஒருமுறை திருப்பதி கோயிலில் எஸ்.பி.பி.யை பார்த்த ரசிகர் ஒருவர் திடீரென்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரை தடுத்த எஸ்.பி.பி, ’நானும் உன்னை போல ஒரு மனிதன், என் காலில் விழக்கூடாது வேண்டுமென்றால் கட்டிப் பிடித்துக் கொள்’ என்று ரசிகரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் எஸ்.பி.பி பாலிவுட்டுக்கு சென்று இந்தி பாடல்களை பாட ஆரம்பித்தார். குறிப்பாக நடிகர் சல்மான்கானுக்கு பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதோடு “தில் தீவானா” என்ற பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “சங்கராபரணம்” என்ற திரைப்படம். 1980 ஆம் ஆண்டு வெளியான முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக கொண்ட இந்த தெலுங்கு படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களில் 9 பாடல்களை எஸ்.பி.பி தான் பாடினார். கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்காத போதும் மிக சிறப்பாக இவர் இந்த படத்தில் பாடியிருந்தது இவருக்கு புகழைச் சேர்த்தது. விளைவு, இந்த படத்திற்காக எஸ்.பி.பி க்கு சிறந்த பாடகருக்கான முதல் தேசிய விருது கிடைத்தது.

இத்தனை சிறப்புகளை கொண்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மிக சிறந்த மத நம்பிக்கைகள் மற்றும் எல்லா மத நம்பிக்கை கொண்டவர்களையும் மதிக்கும் மாண்பு நிறைந்தவர்.

இதுவரை சுமார் 42,000 பாடங்களுக்கு மேல் பாடியுள்ள இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என பல மொழிகளில் எந்த தவறும் இல்லாமல் பாடல்கள் பாடும் திறன் கொண்டவர்.

1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம், 1988 ஆம் ஆண்டு வெளிவந்த “ருத்ரவீணா” போன்ற படங்களில் பாடியதற்காக எஸ்.பி.பிக்கு இந்திய தேசிய விருது கிடைத்தது. 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.

1996ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற “தங்கத் தாமரை மகளே” பாடலுக்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.

இந்திய அரசு எஸ்.பி.பி.க்கு 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கியது.

ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்ற எஸ்.பி.பி., 2015 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்” விருதையும் பெற்றுள்ளார்.

இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில், சட்டத்தரணி ரஷீட் எம். இம்தியாஸ், ராதா மேதா, பஷ்லி ரூமி ஆகியோர் உரையாற்றியதோடு, மற்றும் கவிமணி நஜ்முல் ஹுஸைன், ஈழகணேஷ், ஆசிரியர் சுபாஷினி ஆகியோர் கவிதை பாடினர்.

No comments:

Post a Comment