பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி - 45 நிமிடங்கள் நீடித்த சந்திப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 30, 2020

பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி - 45 நிமிடங்கள் நீடித்த சந்திப்பு

பெலாரஸ் ஜனாதிபதிக்கு எதிராக உள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஐரோப்பிய நாடான பெலாரசில் 1994 ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லூகாஷென்கோவே ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

26 ஆண்டுகளாக ஜனாதிபதியாக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. மேலும், ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் முறைப்படி ஒப்படைக்க குழு ஒன்றும் எதிர்க்கட்சி தலைவரால் அமைக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் தானே வெற்றி பெற்றதாகவும், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப்போவதில்லை எனவும் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டை நாடான லிதுவேனியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச் சென்றுவிட்டார். ஆனால் ஒருங்கிணைப்பாளர்களில் முக்கிய நபரான மரியா கொலிஸ்னிகோவா பெலாரஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

இதனால், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், ஜனாதிபதி அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

பெலாரஸ் ஜனாதிபதிஅலெக்ஸ்சாண்டருக்கு ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆதரவு அளித்து வருகிறார். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், வல்லரசு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நடைபெற்றும் களமாக பெலாரஸ் மாறி வருகிறது. 

இந்நிலையில், நேட்டோ படைகளின் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நேற்று லுதுவேனியா பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயாவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் நேற்று சந்தித்தார்.

45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இமானுவேல் மேக்ரான்,’ நாங்கள் ஒரு நல்ல கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். நாம் நடைமுறைக்கேற்ப செயல்பட வேண்டும். பெலாரஸ் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எங்களால் முடிந்தவற்றையல்லாம் நாங்கள் செய்வோம், என்னை நம்புங்கள்’ என்றார்.

அதேபோல் இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா, ‘பெலாரசில் தற்போது நிலவிவரும் அரசியல் குழப்பம் தொடர்பாகவும், ஆட்சி அதிகாரத்தை எங்கள் வசம் ஒப்படைக்க தேவையான முயற்சிகள் எடுப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் என்னிடம் உறுதியளித்துள்ளார். 

மேலும், பெலாரஸ் சிறைகளில் உள்ள அரசியல்வாதிகளை உடனடியாக விடுதலை செய்ய தேவையாக முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்’ என்றார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் லிதுவேனியாவில் உள்ள நோட்டோ படையினரை இம்மானுவேல் சந்தித்தார். ஐரோப்பிய நாடுகளில் மிகவும் ஆதிக்கம் வாய்ந்த நாடாக உள்ள பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியை பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் சந்தித்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad