20 ஆவது திருத்தத்தை தயாரித்தவர் யார் என்றே தெரியவில்லை, நிச்சயமாகத் தோற்கடிப்போம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சூளுரை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 15, 2020

20 ஆவது திருத்தத்தை தயாரித்தவர் யார் என்றே தெரியவில்லை, நிச்சயமாகத் தோற்கடிப்போம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சூளுரை

(நா.தனுஜா) 

ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் சிலர் எப்பாடுபட்டேனும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம் என்று சூளுரைக்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவாக யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எமது கட்சியைப் பொறுத்தவரையில், நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுத்துவிட்டு சூட்கேஸ்களுக்கு விலைபோகின்றவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை. அப்படி எவரேனும் இருப்பின் அவர்களுடன் எதுவித அரசியல் தொடர்புகளையும் ஐக்கிய மக்கள் சக்தி பேணாது. அதேவேளை யாரால் தயாரிக்கப்பட்டது என்பதே தெரியாத இந்த 20 ஆவது திருத்தத்தை அனைத்து சிவில் சமூகக்குழுக்களையும் இணைத்துக்கொண்டு நிச்சயமாகத் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்தார். 

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து '20 ஐ தோற்கடிப்போம்' என்ற தொனிப்பொருளிலான மக்கள் கூட்டமொன்றை நேற்று செவ்வாய்கிழமை மாலை புதிய நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது இன்று (நேற்று) சர்வதேச ஜனநாயகத்திற்கான தினமாகும். இவ்வாறானதொரு நாளில் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சியை முறியடித்து, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக நாமனைவரும் ஒன்றுகூடியிருக்கின்றோம். தற்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கின்ற அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் கேடானது என்ற வாதத்தை நாட்டை நேசிக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். 

நான் ஆரம்பகாலங்களில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். எனினும் கடந்த காலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் ஊடாக சீரற்ற நிறைவேற்றதிகாரத்தினால் நாட்டிற்கு ஏற்படத்தக்க கேடு எத்தகையதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனாலேயே எனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கடந்த 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான போராட்டத்தில் நானும் முன்நின்று செயற்பட்டேன். 

அதன்படி நாம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். அதனூடாக நல்லாட்சியொன்றில் காணப்பட வேண்டிய அனைத்து ஜனநாயக கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக ஒருவர் மாத்திரம் தன்னிச்சையாகத் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய நிலையை 19 ஆவது திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்தோம். நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டதுடன் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் ஊடாக உயிர்ப்பலிகள் அற்ற நியாயமான தேர்தல்களை நடத்தக்கூடிய நிலையேற்பட்டது. 

எனினும் தற்போது வெறுமனே சர்வாதிகாரப்போக்கில் மாத்திரமே அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் உள்ளடக்கங்கள் எவற்றிலும் ஜனநாயகத்தன்மைகள் தென்படவில்லை. அதுமாத்திரமன்றி 19 ஆவது திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட ஜனநாயக கட்டமைப்புக்கள் இந்தப் புதிய திருத்தத்தின் ஊடாக நீக்கப்படும் நிலையேற்பட்டிருக்கிறது. 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்பது நாட்டின் நலன்களை மையப்படுத்தியது அல்ல. மாறாக அது தனிநபரின் நலன்களை மாத்திரமே இலக்காகக் கொண்டிருக்கின்றது. இந்தத் திருத்தம் இதுவரை காலமும் பிரதமர் மற்றும் பாராளுமன்றத்திடம் பகிரப்பட்டிருந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு மாற்றுவதைப் பரிந்துரை செய்கின்றது. 

ஆனால் நாம் எதற்காக ஜனாதிபதி அல்லது பிரதமரில் ஒருவருக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்க வேண்டும் ? மாறாக அவர்களிடத்தில் அதிகாரங்களை சமளவில் பகிர்ந்தளிக்க முடியுமல்லவா? தனியொருவர் தீர்மானம் எடுக்கின்ற நிலைக்குப் பதிலாக அனைவருடனும் கலந்துரையாடித் தீர்மானங்களை மேற்கொள்கின்ற நிலையை ஏற்படுத்த முடியுமல்லவா? 

19 ஆவது திருத்தத்திலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்ற என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் அதற்காக நாம் செய்யவேண்டியது அதனை இல்லாதொழிப்பது அல்ல. மாறாக அதில் குறைபாடுடைய திருத்தங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும். 

எனவே எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் அனைத்து சிவில் சமூக அமைப்புக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை நிச்சயமாகத் தோற்கடிப்போம். இப்போது அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு 20 ஆவது திருத்தத்தைத் தயாரித்தவர் யார் என்பதே தெரியவில்லை. அரசாங்கத்தின் புலனாய்வுத்துறையால் கூட அதனைக் கண்டறிய முடியாது என்றே நினைக்கின்றேன். அதனைத் தயாரித்தது யார் என்ற கேள்விக்குப் பதில் கூற முடியாமல் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஊடகங்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறார்கள். 

அதேபோன்று ஆளுந்தரப்பின் மேலும் சில உறுப்பினர்கள் எப்பாடுபட்டேனும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம் என்று சூளுரைக்கின்றார்கள். அவர்களிடம் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

ஆனால் எமது கட்சியைப் பொறுத்தவரையில், நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுத்துவிட்டு சூட்கேஸ்களுக்கு விலைபோகின்றவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை. அப்படி எவரேனும் இருப்பின் அவர்களுடன் எதுவித அரசியல் தொடர்புகளையும் ஐக்கிய மக்கள் சக்தி பேணாது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். 

இந்நிகழ்வில் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹர்ஷ டி சில்வா, திஸ்ஸ அத்தநாயக்க, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment