பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் - யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் - யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர்

பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நிலையங்கள் கூட மூடப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது. அப்படியான சூழ்நிலையில் பல்கலைக்கழகத்தினை நிலைநிறுத்துவது என்பது சவாலான விடயம். எனவே குழுவாக இணைந்து இதனை செயற்படுத்தவுள்ளேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டாயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகிறார்கள். 11 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது பெரிய குழுவாகும்.

இது கடவுளால் வழங்கப்பட்டுள்ள பதவியாகும். இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தை நேசித்து செயற்படுகின்றார்கள். இந்தப் பல்கலைக்கழகம் எமது மக்களுடைய ஒரு சொத்தாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் மிகப்பெரியது. கல்வியை ஆதாரமாகக் கொண்ட சமூகம் இந்த பல்கலைக்கழகம் மீது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றது.

கல்வி பாரம்பரியத்தின் கலைக்கோயில் இந்த பல்கலைக்கழகம். இராமநாதனால் வழங்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி இன்று பல்கலைக்கழகமாக மிளிர்ந்திருக்கின்றது.

இதேவேளை, ஊடகங்கள் உரிய முறையில் செயற்பட வேண்டும். கருத்து முரண்பாடுகள் பல்கலைக்கழகத்தில் வரவேற்கப்படும். இதுவே கல்வி நடவடிக்கையில் ஒரு முக்கியமான விடயம். அனைத்து விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டு நிறுவனத்தை முன்னிறுத்தி முடிவுகள் எடுக்கப்படும். தனிப்பட்ட ரீதியில் எந்த முடிவும் எடுக்கப்படாது. ஒரு நிறுவனம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad