இனங்களுக்கிடையே ஐக்கியத்தை விரும்பும் அரசின் செயற்பாட்டுக்கு விக்கியின் உரை குந்தகம், இனவாதத்தை தூண்டி துரோகியாக வேண்டாம் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை விரும்பும் அரசின் செயற்பாட்டுக்கு விக்கியின் உரை குந்தகம், இனவாதத்தை தூண்டி துரோகியாக வேண்டாம் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர

சி.வி.விக்னேஸ்வரனின் உரை நாட்டு மக்களிடையே இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து இனங்கள் மத்தியிலும் ஐக்கியத்தை ஏற்படுத்த புதிய அரசாங்கம் செயற்பட்டு வரும் பின்புலத்தில் இனவாதத்தை தூண்டி நாட்டுக்கு துரோகிகளாக வேண்டாமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சி.வி.விக்கினேஸ்வரனின் உரை தொடர்பில் நாட்டு மக்கள் எவரும் திருப்தியடையவில்லை. இவரின் உரை குறித்து நாம் கவலையடைகிறோம். மீண்டும் இந்த நாட்டில் இனவாதப் போராட்டங்கள் ஏற்படும் வகையில் எவரும் கருத்துகளை வெளியிடக் கூடாது.

மீண்டும் இந்த நாட்டில் யுத்தமொன்றை ஏற்படுத்துவதல்ல எமது நோக்கம். தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும் சமத்துவத்துடன் வாழ்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதே ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. 

எந்தவொரு இனத்துக்கும் உயர்வாக சலுகைகளை வழங்கவும் எந்தவொரு இனத்துக்கும் குறைவான சலுகைகளை வழங்குவதும் எமது நோக்கமல்ல. வடக்கு மக்களின் வாக்குளை எதிர்பார்த்துதான் இவர்கள் பேசுகின்றார்கள் என எமக்குத் தெரியும்.

இவ்வாறான கருத்துகளால் மீண்டும் இனங்களுக்கிடையில் கசப்புணர்வுகளே ஏற்படும். இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் செயற்பாடு இடம்பெற்றுவரும் சந்தர்ப்பத்தில் ஐக்கியமின்மையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிடுவதில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து பேசினால் தமிழ் மக்கள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் வைராக்கியம் ஏற்படும். இதற்கு இடமளிக்க வேண்டாம். இனவாதப் போராட்டமொன்று ஏற்படாத வகையில் அனைவரும் ஐக்கியத்துடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad