இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடன் வாழ வேண்டி காலியைச் சேர்ந்த நபர் நடை பயணம்! - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடன் வாழ வேண்டி காலியைச் சேர்ந்த நபர் நடை பயணம்!

இலங்கை மக்கள் அனைவரும் சமாதானத்துடன் வாழ வேண்டி காலியை சேர்ந்த நபர் நடை  பயணம்! | Virakesari.lk
இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என வேண்டி காலியைச் சேர்ந்த நபர் நடை பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த நடை பயணமானது இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. 

இலங்கை தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு தனி நபராக குறித்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ள காலி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியம் பாலகுமார என்பவர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாகா விகாரைக்கு சென்று மீண்டும் காலியை சென்றடைய உள்ளதாக ஊடகங்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்திலிருந்து இம்மாதம் தனது நடை பயணத்தை ஆரம்பித்த அவர் 20 நாட்களிற்கு மேலாக நடை பயணத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, திஸ்ஸ லுனுகம்வேர, கதிர்காமம், வெல்லவாய, மொனராகல, பொலநறுவை, திருகோணமலை ஊடாக வடக்கு நோக்கி பயணித்த இவர் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தார். 

நாளைய தினம் யாழ்ப்பாணத்தினை சென்றடைந்து பின்னர் மீண்டும் காலிக்கு தனது பயணத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி எல்லோரோடும், இராணுவம், பொலிசாரின் ஆதரவுடன் இப்பயணத்தை ஆரம்பித்தேன். இன்று 24 நாட்கள் ஆகின்றது. 1989ம் ஆண்டு காலப்பகுதியில் விளையாட்டு வீரராகவும், சிங்கள கலாச்சார கலைஞருமாவேன். சுனாமி நேரத்தில் எனது வீடு அழிந்துள்ளது. 12 வருடம் கூலி வேலை செய்தே வாழ்கின்றேன்.

இலங்கைக்கு தேசத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது. அதனாலேயே அனைத்து மக்களும் சமாதானமாக ஒரே நாட்டில் வாழ வேண்டும் என்பதற்காக இலங்கை கொடியை அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்கின்றேன். அவ்வாறு கொண்டு சென்ற முதல் நபரும் நானாகவே இருப்பேன் என்று நம்புகின்றேன்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரு தாயின் குழந்தையாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். ஜனாதிபதி மற்றும் பொதுமக்களிடம் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன். அனைத்து இன, மத மக்களும் சமாதானமாக இலங்கை தேசத்தில் வாழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். 

கொரோனா நிலையிலிருந்து நாடு நல்ல நிலைமைக்கு மீண்டும் வர வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சாந்தி சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே இதை முன்னெடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment