பௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடன் உள்ளார், முதலாவது விமானத்தை இலங்கை அனுப்பி வைக்க வேண்டும் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - News View

Breaking

Post Top Ad

Saturday, August 8, 2020

பௌத்த மதத்தை முன்னேற்ற பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடன் உள்ளார், முதலாவது விமானத்தை இலங்கை அனுப்பி வைக்க வேண்டும் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

பௌத்த மதத்தை முன்னேற்றுவதில் ...
(நா.தனுஜா)

பௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்திருக்கும் அதேவேளை, பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே இந்தியப் பிரதமர் தொலைபேசியின் ஊடாக வாழ்த்துத் தெரிவித்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்தியாவின் குஷிநகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு முதலாவதாக இலங்கை தனது சர்வதேச விமானத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் 2020 பொதுத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் இன்று சனிக்கிழமை அலரி மாளிகையில் அவரைச் சந்தித்தபோதே இந்திய உயர்ஸ்தானிகர் இந்த அழைப்பையும் விடுத்தார்.

உத்தர பிரதேசத்திலுள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் தீர்மானத்தை கடந்த ஜுன் மாதம் இந்தியா மேற்கொண்டது. இந்த விமான நிலையம் குறித்தளவான பௌத்த தலங்களுக்கு அண்மையில் அமைந்திருப்பதால் இது இலங்கையைப் பொறுத்தவரையில் விசேட அம்சமொன்றாக அமைகின்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பௌத்த மதத்தை முன்னேற்றுவதில் அக்கறை கொண்டிருக்கும் அதேவேளை சுற்றுலாத்துறை, கட்டட நிர்மாணம் போன்ற துறைகளை மேம்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும் கோபால் பாங்லே இச்சந்திப்பின் போது பிரதமரிடம் தெரிவித்தார். 

மேலும் நீர் வழங்கல், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளை 18 பேர் உயிரிழப்பதற்குக் காரணமாக அமைந்த எயார் இந்திய விமான விபத்து குறித்து தனது ஆழ்ந்த இரங்கல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியதுடன், பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே இந்தியப் பிரதமர் தொலைபேசியின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்தமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad