விக்கினேஸ்வரன் மீதான விமர்சனங்களினால் தமிழ் மக்களின் ஆதரவுக்கு பாதிப்பு ஏற்படாது - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, August 29, 2020

விக்கினேஸ்வரன் மீதான விமர்சனங்களினால் தமிழ் மக்களின் ஆதரவுக்கு பாதிப்பு ஏற்படாது - திஸ்ஸ அத்தநாயக்க

இன்று நடப்பதை அன்றே சொன்னேன் - திஸ்ஸ அத்தநாயக்க
(செ.தேன்மொழி)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வரனின் கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை விக்கினேஸ்வரனின் கருத்து தொடர்பிலே தாங்கள் மேலும் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை என்றும், இந்த விமர்சனங்களால் தமிழ் மக்களுடைய ஆதரவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தான் எண்ணவில்லை என்றும் அவர் கூறினார்.

புதிய பாராளுமன்றம் கடந்த 20 ஆம் திகதி முதன் முதலாக கூடியது. புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவை தெரிவு செய்ததன் பின்னர், கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர்.

இதன்போது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் தனது வாழ்த்தை தெரிவித்ததுடன், அவரது வாழ்த்துச் செய்தியிலே 'தமிழ் மொழி உலகின் மிகவும் பழமை வாய்ந்த மொழி என்றும், தமிழ் மக்களே இலங்கையின் முதல் குடிகள்' என்றும் தெரிவித்திருந்தார். 

இதற்கு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாயக்கார எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், விக்கினேஸ்வரனின் கருத்தை ஹன்சாட்டிலிருந்து அகற்றுமாறும் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து எதிர்கட்சியின் சில உறுப்பினர்களும் இந்த கருத்துக்கு இணக்கம் தெரிவிப்பது போன்று விக்கினேஸ்வரனின் கருத்துக்கு எதிராக கூச்சலிட்டனர்.

இந்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வினவிய போது கூறியதாவது, விக்கினேஸ்வரனின் கருத்து தொடர்பில் எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்காரவே முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அது எமது கட்சியின் நிலைப்பாடு கிடையாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகும். இருப்பினும் தொடர்ந்தும் நாங்கள் விக்கினேஸ்வரனின் கருத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை. ஆயினும் இது தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் நாட்டுக்கு தெரியப்படுத்துவோம்.

ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே அதிகளவான ஆதரவை கொடுத்திருந்தனர். பொதுத் தேர்தலின் முடிவுகளின் போதும் கணிசமான தமிழ் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவினை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் எமது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விக்கினேஸ்வரனின் கருத்து தொடர்பில் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளதினால், எமது கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நான் எண்ணவில்லை. இந்த விமர்சனங்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகளாகும், அது எங்கள் கட்சியின் நிலைப்பாடு கிடையாது. 

ஜனநாயக கொள்கைக்கமைய செயற்படும் நாட்டுக்குள் யாரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பான எமது நிலைப்பாட்டை நாங்கள் நாட்டுக்கு விரைவில் தெரியப்படுத்துவோம்.

No comments:

Post a Comment