ராஜபக்ஷ குடும்பத்திற்கு மாத்திரம் 38 சதவீத நிதி ஒதுக்கீடு, குடும்ப அதிகாரத்தை பலப்படுத்தவே 19 ஐ நீக்க முயற்சி - ஹர்ஷன ராஜகருணா - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

ராஜபக்ஷ குடும்பத்திற்கு மாத்திரம் 38 சதவீத நிதி ஒதுக்கீடு, குடும்ப அதிகாரத்தை பலப்படுத்தவே 19 ஐ நீக்க முயற்சி - ஹர்ஷன ராஜகருணா

UNP determined to abolish Executive Presidency: Harshana | Daily News
(செ.தேன்மொழி)

இடைக்கால கணக்கறிக்கையில் ராஜபக்ஷர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு மாத்திரம் 38 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, அவர்கள் குடும்பத்தின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சிக்கின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, ஒரு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தால் அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடந்தகால ஆட்சியின் போது உறுதியாகியிருந்தது. இந்த நிலைமை மீண்டும் தோற்றம் பெறுமா? என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்ஷர்களின் குடும்ப ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதனை பலப்படுத்துவதற்காகவும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சித்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொடுத்துள்ளனர். அதனால் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்கு ஆளும் தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதாக இருந்தால், எதற்காக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள். 

ஆளும் தரப்பைச் சேர்ந்த நிபுணர் குழுக்கள் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து வருகின்ற போதிலும், அரசாங்கம் அதனை நீக்கும் எண்ணத்திலேயே இருக்கின்றது.

இடைக்கால கணக்கறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் 38 சதவீதமான நிதி ராஜபக்ஷர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்கள் மற்றும் நாட்டின் உயர் மட்டத்திலான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முற்படுகின்றார்கள்.

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை என்பதினால், அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சித்து வருகின்றார்கள். 

இதேவேளை அமைச்சு நியமனங்களுக்கும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது தரப்பைச் சேர்ந்த பலருக்கு மேலும் அமைச்சுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியிருப்பதாலே அதனை நீக்க முயற்சிக்கின்றது.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக இணைந்து கொள்ளாத பலருக்கு அமைச்சு பதவிகளை பெற்றுக் கொடுக்காது திட்டமிட்டே புறக்கணித்து வருவதுடன், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக குறிப்பிட்டு ஆறுதலும் வழங்கி வருகின்றனர். 

இந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டு 5 வருடங்களே கழிந்துள்ளன. இதில் பல சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சுயாதீன ஆணைக்குழுக்களில் எதாவது சிக்கல்கள் காணப்பட்டால் அவர்கள் தொடர்பில் சபாநாயகர் வினவி நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது பாராளுமன்றம் செயற்படுவதுடன் சபாநாயகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் அவர் சுயாதீனமாக செயற்படுவார் என்று நாங்கள் எண்ணுகின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad