எங்களது வழிமுறையில் இடம்பெயர்தலோ இரத்தம் சிந்துதலோ, உயிரிழப்புகளோ இருக்க முடியாது இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதே எமது கொள்கை என்கிறார் அமைச்சர் டக்லஸ் - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

எங்களது வழிமுறையில் இடம்பெயர்தலோ இரத்தம் சிந்துதலோ, உயிரிழப்புகளோ இருக்க முடியாது இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதே எமது கொள்கை என்கிறார் அமைச்சர் டக்லஸ்

கல்லோடு கட்டி என்னை சமுத்திரத்தில் ...
எங்களது வழிமுறையில் இடம்பெயர்தலோ இரத்தம் சிந்துதலோ, உயிரிழப்புகளோ இருக்க முடியாது இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதே எமது கொள்கையும் வேலைத்திட்டமும் என்று கடற்தொழில் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எங்களது கட்சியை பொறுத்த வரை மக்களிற்கான வாழ்வாதார திட்டத்தை முன்னுதாரணமாக வைத்துள்ளது. உழைப்பிற்கேற்ப ஊதியம் என்ற வகையில் சுயமாக வாழக்கூடிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். நாடாளுமன்றத்தில் மாத்திரமன்றி வரவுள்ள மாகாண சபைக்கும் எமக்கான அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும்.

கடந்த காலத்தில் தமிழ் தலைமைகளுக்கு பல வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆனால் எந்த சந்தர்ப்பங்களையும் அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்குமேயானால் இன்று நாங்கள் இருக்கின்ற நிலைமையை விட பல மடங்கு முன்னேற்றகரமானதாக வாழ்ந்து கொண்டிருந்திருப்போம்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டு 33 வருடங்கள் முடிவடைந்துள்ளது. அதில் இருந்து பெறப்பட்ட 133 ஆவது திருத்தச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை சரியாக பயன்படுத்தியிருப்போமானால் இன்று சுயநிர்ணய உரிமையை பெற்றிருப்போம். என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்பட கூறுகின்றேன்.

அன்று நாங்கள் எதை சொன்னோமோ அதுதான் நடந்து முடிந்து இருக்கின்றது. நாங்கள் எதை சொல்லிக்கொண்டு இருக்கின்றோமோ அதுதான் நடந்து கொண்டு இருக்கின்றது.

எமக்கு மக்கள் தொடர்பான அக்கறை இருக்கின்றது. அல்லது மக்களுடைய பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. அந்த அனுபவங்கள் இருக்கின்றது. ஆனால் எங்களிடம் போதியளவு வாக்குகள் இல்லை. அது உங்களிடம்தான் இருக்கின்றது. எனவே வர இருக்கின்ற சந்தர்ப்பத்தை எமது மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

நாம் பல ஆசனங்களை பெற்றால் சில வருடங்களில் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம் என்று நம்புகின்றேன். நாம் கடந்த காலங்களில் மக்களினுடைய பல பிரச்சினைகளிற்கு தீர்வினை கண்டிருக்கின்றோம்.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்கிறார் கடந்த தேர்தல்களில் நாம் கள்ளவாக்குகள் போட்டே வந்திருப்பதாகவும் தான் மாத்திரம் 75 கள்ளவாக்குகளை போட்டிருப்பதாகவும் கூறுகின்றார். அவர் கூறியது உண்மைதான். அதன் மூலமே அவர்கள் பல ஆசனங்களை பெற்றார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அப்படி ஆசனங்களை பெற்றபோதும் மக்களிற்கு எதனையும் செய்யவில்லை. பிரச்சினைகளை தீராப்பிரச்சினைகளாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர். எமது கட்சியிடம் கொள்கை இருக்கின்றது. இணக்க அரசியல் என்பது. சரணாகதி அரசியலோ அடிமை அரசியலோ அல்ல. 

இளைஞர் யுவதிகளிற்கு எங்களிடம் பல திட்டங்கள் இருக்கின்றது. அவர்களிற்கு வளமான ஒரு வாழ்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் அதனை செய்வோம். எங்களது வழிமுறையில் இடம்பெயர்தலோ இரத்தம் சிந்துதலோ, உயிரிழப்புகளோ இருக்க முடியாது. இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதே எமது கொள்கையும் வேலைத்திட்டமும்.

தற்போதைய சூழலில் சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் அவர்களால் வெல்ல முடியாது. அத்துடன் தேசியக் கட்சிகளில் போட்டியிடுபவர்களாலும் உங்களது பிரச்சினைகளை தீர்க்க முடியாது. பிராந்திய கட்சிககளை பார்த்தால் மக்களை சூடேற்றி உசுப்பேத்தி அரசியல் செய்தார்கள். ஆனால் மக்களிற்கு எதனையும் செய்யவில்லை. 

எனவே வீணைக்கு வாக்களியுங்கள். நாம் இணக்க அரசியலூடாக நாங்கள் நாங்களாக இருந்துகொண்டு உங்களது பிரச்சினைகளிற்கு தீர்வினை காண்போம் என்று உறுதி கூறிக்கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment