ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் கொரோனா தொற்று அதிகரித்தால் ஏற்படும் அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் கொரோனா தொற்று அதிகரித்தால் ஏற்படும் அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும்

(எம்.மனோசித்ரா) 

எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கமைய, இக்காலப்பகுதியில் வைரஸ் பரவல் தீவிரமடையும் பட்சத்தில் ஏற்படக்கூடிய எவ்விதமான அனர்த்ததிற்கும் முகங்கொடுப்பதற்கு சகல சுகாதாரத் துறையினரும் தயாராக இருக்க வேண்டும் என்பது பற்றி சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. 

அதற்கமைய ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை முன்னரைப் போன்று தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களை தெளிவுபடுத்துவதற்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் முன்னெடுக்கப்பட வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள விசேட ஆலோசனைக் குழு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் புதன்கிழமை கூடியது. இதன்போதே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

இந்த விசேட ஆலோசனைக் குழுவில் வைத்திய நிர்வாகிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் விசேட வைத்தியர்கள் என 35 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இக்குழு இரு தினங்களுக்கு ஒரு தடவை சுகாதார அமைச்சர் தலைமையில் கூடும். 

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் பட்சத்தில் ஏற்படக் கூடிய எந்தவொரு அனர்த்த்திற்கும் முகங்கொடுப்பதற்கு சுகாதாரத் துறையினர் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பது பற்றி இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

வைரஸ் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுத்தல் உள்ளிட்டவை தொடர்பில் சுகாதார சேவைக் குழுவினருக்கு வேண்டிய பயிற்சியளித்தல் பற்றியும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. 

மேலும் கிராம, மாவட்ட மற்றும் பிரதான வைத்தியசாலைகளில் சேவையில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு அங்கிகளை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

எதிர்வரும் தினங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சமூக இடைவெளியைப் பேணுதல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad