9ஆவது மரணத்தை அடுத்து, சுமார் 1,200 பேர் சுயதனிமைப்படுத்தலில் - முப்படையின் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,883 பேர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

9ஆவது மரணத்தை அடுத்து, சுமார் 1,200 பேர் சுயதனிமைப்படுத்தலில் - முப்படையின் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,883 பேர்

மோதறை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர் இன்று (05) மரணமடைந்ததை அடுத்து, இரு தொகுதிகளைக் கொண்ட 'மெத்சந்த செவன' அடுக்குமாடி குடியிருப்பின் 'B' தொகுதியில் வசிக்கும் 239 வீடுகளில் உள்ள சுமார் 1,200 இற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மரணமடைந்த 52 வயதான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 06 பேர் உள்ளிட்ட 15 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின், மாவட்ட இல 01, சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் சசங்க ரணசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது வரை, முப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,883 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் 28 தனிமைப்படுத்தல் நிலையங்களும், கடற்படையின் கட்டுப்பாட்டில் 06 தனிமைப்படுத்தல் நிலையங்களும், விமானப்படையின் கட்டுப்பாட்டில் 05 தனிமைப்படுத்தல் நிலையங்களும் உள்ளன.

இன்றையதினம் (05) நாட்டின் 03 வெவ்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடன் தொடர்புடைய 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் 56 பேரும் கண்டியில் 67 பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொலொன்னாவ - சாலமுல்ல மற்றும் ராஜகிரிய - பண்டாரநாயக்கபுர, கண்டி - கொலபிஸ்ஸ ஆகிய மூன்று பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கொலொன்னாவ - சாலமுல்ல பகுதியில் 27 பேர், ராஜகிரிய - பண்டாரநாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 29 பேர், கண்டி கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 67 பேர் உள்ளிட்ட 138 பேர், நேற்றையதினம் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad