இரசாயனத் தொழிற்சாலையில் வாயுக்கசிவு : 8 பேர் உயிரிழப்பு - 5 கிராமங்கள் பாதிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

இரசாயனத் தொழிற்சாலையில் வாயுக்கசிவு : 8 பேர் உயிரிழப்பு - 5 கிராமங்கள் பாதிப்பு

ஆந்திரபிரதேஷின் விசாகப்பட்டிணத்தில் இரசாயனத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வாயுக்கசிவில் சிக்கி குழந்தையொன்று உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், வாயுக்கசிவினால் பாதிக்கப்பட்ட 200-க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தவிர ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், சிலருக்கு வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன.

இரசாயன வாயுக்கசிவினால் குறித்த ஆலையைச் சூழவுள்ள 3 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதியிலுள்ள 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இராசாயன ஆலையில் இன்று அதிகாலை 2.30-க்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவர்களை அம்பியூலன்ஸ், பஸ்கள், வேன்களின் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சுமார் 2,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் பொலிஸார் கூறியுள்ளனர்.

COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு காரணமாக, குறித்த ஆலையின் மிகப்பெரிய வாயுத்தாங்கிகள் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தமையால் வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாமென ஊகிக்கப்படுகின்றது.

5000 தொன் வாயுத்தாங்கிகள் இரண்டிலிருந்தே கசிவு ஏற்பட்டுள்ளதாக விசாகப்பட்டிணம் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வாயுக்கசிவின் பாரதூரத்தன்மை, வாயுக்கசிவிற்கான உண்மையான காரணம், அதனால் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணம் ஆகியன தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாயுக்கசிவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad