மாளிகாவத்தை நெரிசல் சம்பவம் - கைதான 7 பேருக்கும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, May 22, 2020

மாளிகாவத்தை நெரிசல் சம்பவம் - கைதான 7 பேருக்கும் விளக்கமறியல்

மாளிகாவத்தையில் ரமழான் மாதத்தையொட்டி வறிய மக்களுக்கு பணம் பகிர்ந்தளிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சி்க்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான 7 பேருக்கும் ஜூன் 04 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று (21) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இச்சம்பவத்தில் மேலும் 08 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த வர்த்தகர் உள்ளிட்ட 07 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மாளிகாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வருடாந்தம் ரமழான் மாதத்தில் பணம் பகிர்ந்து வந்துள்ளதோடு இந்த வருடமும் அவர் பணம் பகிர்ந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது ஆண்களும் பெண்களும் வெவ்வேறாக வரிசையில் நின்றிருந்த நிலையில், தீடிரென ஏற்பட்ட தள்ளுதல் காரணமாக வயதான பெண் ஒருவர் வீழ்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்ததில் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மருதானையை சேர்ந்த உம்மு அகீலா (62), மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியை சேர்ந்த எம்.பெளசியா, மாலிகாவத்தை லக்சிறி வீதியைச் சேர்ந்த பரீனா (68) ஆகிய மூவரே இதில் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் எவ்வித முன்னறிவித்தலும் பெறப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தகர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த 7 பேரும், நேற்றையதினம் (21) புதுக்கடை நீதவான் இலக்கம் 04 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை எதிர்வரும் ஜூன் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment