5000 ரூபாவை வழங்கிவிட்டு 50,000 ரூபா வழங்கியதைப் போன்று பிரசாரங்கள், பொதுஜன பெரமுனவின் நிதியிலிருந்து வழங்கியதைப் போன்று ஆளுந்தரப்பினர் கூறுகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 6, 2020

5000 ரூபாவை வழங்கிவிட்டு 50,000 ரூபா வழங்கியதைப் போன்று பிரசாரங்கள், பொதுஜன பெரமுனவின் நிதியிலிருந்து வழங்கியதைப் போன்று ஆளுந்தரப்பினர் கூறுகின்றனர்

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் அரசாங்கம் அதன் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படக் கூடாது அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. அதற்கான நிவாரணமும் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே மக்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களைக் கைவிட வேண்டாம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால் இவ்வாறான சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் அரசியல் ரீதியில் பக்க சார்பாகவே செயற்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக கூடிய விரைவில் தேர்தலை நடத்துவதற்கே முயற்சிக்கின்றது. 

இந்நிலையில் கடந்த மாதங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தது. எனினும் இலங்கையில் அதற்கான பயன் மக்களுக்கு வழங்கப்படவில்லை. பருப்பு மற்றும் டின் மீனின் விலையைக் குறைத்து எரிபொருள் நிவாரணத்தை அதன் மூலம் வழங்குவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்னர் பருப்பு மற்றும் டின் மீனுக்கான நிர்ணய நிலை நீக்கப்பட்டுள்ளது. 

உலக சந்தையில் எரிபொருள் குறைந்ததற்கான பயனும் மக்களைச் சென்றயவில்லை. அதற்காக வழங்கப்படுவதாகக் கூறிய நிவாரணங்களும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறெனில் நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் எங்கு செல்கிறது ? நாட்டில் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் அந்த மக்களின் வாழ்க்கை இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை. 

இன்னும் சில காலம் சென்றதன் பின்னரே மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். அவ்வாறிருக்கையில் தற்போது நிவாரணம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதனை எதற்காக அரசாங்கம் நிறுத்தியது ? மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான நிவாரணங்களை கைவிட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம். 

5000 ரூபாய் கொடுப்பனவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மாதம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த செயற்திட்டம் முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. சர்வதேச ரீதியில் பல்வேறு வழிகளில் நிதியுதவி கிடைக்கப் பெற்ற போதிலும் பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. 

5000 ரூபாவை வழங்கிவிட்டு 50,000 ரூபா வழங்கியதைப் போன்று அதற்கான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுஜன பெரமுனவின் நிதியிலிருந்து அந்த கொடுப்பனவை வழங்கியதைப் போன்று ஆளுந்தரப்பினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். எனினும் இம்மாதம் அந்த கொடுப்பனவை வழங்கும் போதாவது அதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோருகின்றோம். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பலர் தற்போதும் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அதற்கு ஒரு இலட்சம் ரூபா செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தியோகபூர்வ வாகனங்களை பாவிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கு எரிபொருளுக்காக சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் வரை வழங்கப்படும். அவ்வாறெனில் அரசாங்கத்திடம் 2 இலட்சத்து 40 ஆயிரத்தைப் பெற்று அதிலிருந்தே அரசாங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபா செலுத்தப்படுகிறது. இதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. 

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்த முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளுக்கான நிவாரணப் பணத்தை மீதப்படுத்த முடியும். அதிலிருந்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment