யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர்கள் குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 23, 2020

யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர்கள் குழு நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென பல்கலைக்கழக பேரவையினால் மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிறப்புப் பேரவைக் கூட்டத்திலேயே மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையில், வரலாற்றுத் துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் மற்றும் பெளதிகவியல் துறை பேராசிரியர் பு.ரவிராஜன் ஆகியோர் பேரவையினால் தேடற் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை இம்மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளரால் இம்மாதம் 15 ஆம் திகதி பத்திரிகைகள் வாயிலாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவு தினம் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி ஆகும். இந்த விண்ணப்பங்கோரலுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் பதிவாளரால் பெறப்பட்டிருந்தது.

சுற்றறிக்கையின் படி துணைவேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, அவர்களைத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் பேரவையினால் நேற்று தேடற்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தக் குழுவுக்கு அனுபவமும், ஆளுமையும் மிக்க மூத்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனால், அவர்களின் தேடலில் மிகப் பொருத்தமானவர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகப் பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment