மட்டக்களப்பில் கோஷ்டி மோதலில் 26 வயது நபர் பலி, மற்றொருவர் காயம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 20, 2020

மட்டக்களப்பில் கோஷ்டி மோதலில் 26 வயது நபர் பலி, மற்றொருவர் காயம்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற கோஷ்டி மோதலின்போது 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றுமொருவர் வெட்டப்பட்டு காயமடைந்துள்ளார்.

நேற்றிரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஜயபாலன் நிரோஷன் என்பவரே கொலை செய்யப்பட்டவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த வாரம் ஆரம்பமான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன் பிடித்தொழிலாளியான இவர் தனது நண்பரது வீட்டிற்குச் சென்று திரும்பும்போது கோஷ்டியொன்றினால் வழிமறிக்கப்பட்டு மிளகாய்த்தூள் வீசப்பட்ட பின்னர் குத்திக் கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இரு கோஷ்டியிரிடையே ஏற்பட்ட மோதலின்போது ஒருவர் குத்திக் கொல்லப்பட்டதாகவும் மற்றையவர் வெட்டுக் காயப்பட்டதாகவும் இரு வேறு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கொல்லப்பட்டவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றனர்.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

(ஏறாவூர் நிருபர் - எம்.ஜி.ஏ. நாஸர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad