பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு! - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு!

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து முல்லைத்தீவில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முத்தையன்கட்டு இடது கரைப் பாடசாலையின் பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான நிலையங்களாக முல்லைத்தீவில் சில பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு தளபாடங்கள் மற்றும் ஆவணங்களும் சீரமைக்கப்பட்டும், அகற்றப்பட்டும் உள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயம், அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம், விஸ்சுவமடு பாரதி வித்தியாலயம், இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கூழாமுறிப்பு பாடசாலை, தண்டுவான் அ.த.க பாடசாலை ஆகியன உள்ளடங்குகின்றன.
இவற்றில் முத்தையன்கட்டு இடதுகரைப் பாடசாலையில் தளபாடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்களின் ஆவணங்கள் அடங்கிய அலுமாரி இராணுவத்தால் அயலிலுள்ள தனியார் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாடசாலைக்கு முன்பாகக் கூடிய 60ற்கும் மேற்பட்ட பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதேபோன்று வலதுகரை மகா வித்தியாலயத்தில் கூடிய 30ற்கும் மேற்பட்ட பெற்றோரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். நெருக்கமான குடியிருப்புக்களைக் கொண்ட விவசாய பிரதேசமாக முத்தையன்கட்டு காணப்படுவதாலும், தனிமைப்படுத்தல் நிலையம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டால் இது மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டே இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாங்குளம் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad