ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரங்களை தர்க்கத்திற்குட்படுத்துவது கண்டிக்கத்தக்கது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Monday, March 23, 2020

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரங்களை தர்க்கத்திற்குட்படுத்துவது கண்டிக்கத்தக்கது - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்) 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி தொடர்பான அதிகாரங்களை இன்று பல்வேறுபட்ட தர்க்கங்களுக்கு உட்படுத்துபவர்களின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், பொதுமக்களை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் எதிர்த்தரப்பினர் இதனை தங்களின் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வது பொருத்தமற்றதாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படாமல், 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் செல்லுப்படியாகும் வகையில் இடைக்கால கணக்கறிக்கை தனது அரசாங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மார்ச் 20 ஆம் திகதி ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார். 

அத்துடன் அரசாங்கம் அரச நிதிகளை செலவிடுவதற்கு அரசியலமைப்பிற்கு முரண் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது முகப்பு புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவும் பொது தேவைகளுக்கான நிதி ஒதுக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் 150(3)ம் சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நெருக்கடி நிலைமையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகத்திற்கான நிதி அனைத்தும் ஜனாதிபதியின் விசேட அதிகாரத்திற்கு அமையவே ஒதுக்கப்படுகின்றது. 

நாட்டின் நிலைமையினை கருத்திற் கொண்டே பெப்வரி மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கணக்கு வாக்கெடுப்பு திருத்தம் சமர்ப்பித்தோம். ஆனால் அதற்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கவில்லை. 

நாட்டில் முதலாவது கொரானா நோயாளர் அடையாளம் காணப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான திகதி ஒதுக்கி விட்டார். பொதுத் தேர்தலுக்கான திகதி அரசியலமைப்பின் 70(5) பிரிவின் கீழ் விசேட வர்த்தமானிக்கு அமைய வெளியிடப்பட்டது. 

முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நேரத்தில் இருந்து பொதுத் தேர்தலை பிற்போட வேண்டும். என்ற கருத்தினை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தோற்றுவித்தார். 

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையினை கருத்திற் கொண்டு பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 1981 இலக்கம் 24(3) சரத்திற்கு அமைய பொதுத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை ஐக்கிய தேசிய கட்சியின் இரு தரப்பினரும் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். 

பாராளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் நிதி ஒதுக்குவதற்கு தடை ஏற்படுத்தி விட்டு தற்போது ஜனாதிபதி நிதி ஒதுக்குவது தொடர்பில் சட்டதர்க்கங்களை ஏற்படுத்தி கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

தற்போதைய நிலைமையில் இருந்து நாட்டு மக்களை எவ்வழியிலாவது பாதுகாப்பதற்காகவே நடவடிக்கைகளை முன்னெடுதது வருகின்றோம். 

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் முப்படையினர் மற்றும் சுகாதார பிரிவினர் மற்றும் பொதுமக்கள் அனைவரது செயற்பாடுகளையும் வரவேற்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad