நல்லாட்சி அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

நல்லாட்சி அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் மூடப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

நல்லாட்சி அரசாங்கத்தின் அசமந்த போக்குகளின் காரணமாக மூடப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகம் இன்னும் சில தினங்களில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டர்ன் பெர்னாண்டோ மூலம் மறுசீரமைக்கப்பட்டு பாவனைக்கு கையளிக்கப்படும் என அமைச்சர்களுக்கான செயலாளர் தேசிய அமைப்பின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ விஜயசேகர குறிப்பிட்டார்.

கொழும்பு வொண்டர் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். 

அங்கு மேலும் தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 16 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் துறைமுகம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அசமந்த போக்குகளின் காரணமாக முடங்கி கிடக்கின்றது. 

இலங்கையில் மொன்சூன் காலநிலை நிலவிய காலப்பகுதியில் ஒலுவில் துறைமுகத்தில் அதிகப்படியான மண் தேங்கியுள்ளது அதனை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் மேலும் மண் தேங்கி தற்போது மீன்பிடி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத ஒரு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

டென்மார்க் நிறுவனத்தின் தொழிநுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகம் மூலம் மீன்பிடி மட்டுமன்றி மீன்களை பொதி செய்தல் மற்றும் பதனிடல், களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதுவான கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மீன்கள் மட்டுமன்றி சர்வதேச நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களும் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள செப்பனிடுதல் தொழிற்சாலைகளின் மூலம் செப்பனிடக் கூடிய வசதிகளும் காணப்படுகின்றன. 

இதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் மூடப்பட்டுள்ளதன் காரணமாக சுமார் 25,000 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 200,000 பேரளவில் வேலைவாய்ப்பற்று காணப்படுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளைச் சீரமைக்கும் வகையில் ஒலுவில் துறைமுகம் தொடர்பில் முழுமையான தகவல்களைத் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டர்ன் பெர்னாண்டோவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் சில தினங்களில் ஒலுவில் துறைமுகத்தினை புனரமைத்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் பதனிடல் மற்றும் பொதிசெய்தல் நடவடிக்கைகளுக்கும் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தேசிய நிறுவனமான டெஸ் நிறுவனம் ஒலுவில் துறைமுகத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தேங்கியுள்ள மண்ணை அகற்றவுள்ளது. மேலும் இதுபோன்ற இயற்கை காரணிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்படவுள்ளன.

வீரகேசரி

No comments:

Post a Comment