ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகள் திறக்கப்படாது - உணவுப் பொருட்களை விநியோகிக்க விசேட ஏற்பாடு - கல்முனை மாநகர சபை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சந்தைகள், கடைகள் திறக்கப்படாது - உணவுப் பொருட்களை விநியோகிக்க விசேட ஏற்பாடு - கல்முனை மாநகர சபை

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை (25-03-2020) தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் வேளையில் சன நெரிசலைக் கருத்தில் கொண்டு பொதுச் சந்தைகள் மற்றும் கடைகளை திறக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்தப்படுவதுடன் மக்கள் காலடியே சென்று மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பதற்கு நடமாடும் வியாபாரங்களுக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான உயர்மட்ட செயலணியின் இரண்டாவது கூட்டம் நேற்று புதன்கிழமை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.றிகாஸ், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் அதியசயராஜ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ்வரன், பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.சம்சுதீன் ஆகியோருடன் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் மாநகர சபை உறுப்பினர்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாரக், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின்னர் மேற்படி தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த திங்களன்று (23) தற்காலிகமாக 06 மணித்தியாலங்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்த வேளையில் மக்கள் உணவுப் பொருட்களுக்காக அலைமோதியதையும் இதனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு வாய்ப்பிருப்பதையும் கவனத்தில் கொண்டு, சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களை பின்பற்றி வர்த்தக சங்கங்களின் இணக்கப்பாட்டுடன் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களிலுள்ள பொதுச் சந்தைகள், வியாழக்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் நேர வேளையிலும் சன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு திறக்கப்பட மாட்டாது.

இவற்றுக்குப் பதிலாக மரக்கறிகளை மாத்திரம் கல்முனையில் சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திலும் மருதமுனையில் மஷூர் மௌலானா விளையாட்டு மைதானத்திலும் சாய்ந்தமருதில் பொலிவேரியன் மற்றும் பௌஸி விளையாட்டு மைதானங்களிலும் நற்பிட்டிமுனையில் அஷ்ரப் விளையாட்டு மைதானத்திலும் பாண்டிருப்பில் பொது விளையாட்டு மைதானத்திலும் விற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவற்றை உடனடியாக ஒழுங்குபடுத்துவதற்கும் வியாபார நேரத்தில் கண்காணித்து, வழிநடாத்துவதற்கும் மாநகர ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் பொறுப்பளிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை பாமஸிகளைத் தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள், கடைகள் எக்காரணம் கொண்டும் திறக்க முடியாது. இதற்குப் பதிலாக அவசியமான உணவுப் பொருட்களை ஓட்டோ உள்ளிட்ட வாகனங்களில் நடமாடும் விற்பனை மூலமாக விற்பதற்கு வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இவ்வர்த்தகர்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையிலும் வாகனங்களில் நடமாடும் விற்பனையை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே எமது உயர்மட்ட செயலணியின் தீர்மானத்திற்கமைவாக இவ்வர்த்தககர்ளுக்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தொடக்கம் பொலிஸ் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

வியாழக்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கின்ற வேளையிலும் மக்கள் நடமாட்டமின்றி, ஊரடங்கியிருப்பதன் மூலமே கொரோனா வைரஸ் பரவலில் இருந்து எமது மக்களை பாதுக்காக்க முடியும் என்பதை ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புடமையுடன் கவனத்தில் கொண்டு, ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான உயர்மட்ட செயலணி மன்றாட்டமாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என்று முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்தார்.

முதல்வரின் ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment