அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் தமது இருப்பை மட்டும் வளர்த்து விட்டு பிரதேசங்களின் வளர்ச்சியை மறந்து செயற்படுகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் தமது இருப்பை மட்டும் வளர்த்து விட்டு பிரதேசங்களின் வளர்ச்சியை மறந்து செயற்படுகின்றனர்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

அரசியல்வாதிகள் தங்களது பினாமிகளை பாவித்து பிரதேசங்களின் மண், கல், வியாபாரம், அபிவிருத்தி கமிசன் கலாசாரம் என்பவற்றால் மக்களை ஒரு பேராபத்துக்கு இட்டுச் சென்றுள்ளது என மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

மக்கள் முன்னேற்ற கட்சியின் கோறளைப்பற்று பிரதேசத்திற்கான பிராந்திய செயலகம் ஞாயிற்றுக்கிழமை மாலை வாழைச்சேனை பிரதான வீதியில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் ஊழலற்ற ஒரு அரசியலை மீண்டும் கொண்டு வருவோம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஊழல் பெருகி அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் தமது இருப்பை மட்டும் வளர்த்து விட்டு பிரதேசங்களின் வளர்ச்சியை மறந்து செயற்படுகின்றனர்.
அரசியல்வாதிகள் தங்களது பினாமிகளை பாவித்து பிரதேசங்களின் வளங்களை அதாவது மண் வியாபாரம், கல் வியாபாரம், மலை வியாபாரம் என்றும், அத்தோடு அபிவிருத்தி என்றால் கமிசன் கலாசாரம் எமது மக்களை ஒரு பேராபத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.

எனவே ஊழலற்ற நிலையை உருவாக்குவோம். எமது கிராமங்களுக்கு பொருளாதார அபிவிருத்தியை கொண்டு வருவதற்காக திட்டத்தினை நாங்கள் முழுமையாக உங்களுடன் இணைந்து, உங்களது கருத்துக்களை முன்வைத்து கருத்துக்களை உள்வாங்கி எமது பொருளாதார அபிவிருத்தி நிலைகளை உருவாக்குவோம்.

அரசாங்கத்தினால் ஒதுக்கும் நிதிகளை கொண்டு வீதிகளை மாத்திரம் அமைத்து வளங்களை முடக்க மாட்டோம். எமது மக்களின் தேவைகளை, உரிமைகளை, எமது மக்கள் காலாகாலமாக பாதுகாத்து வந்த கருத்துக்களை, எமது கொள்கைகளை விற்று அரசியல் செய்ய மாட்டோம்.
மக்கள் முன்னேற்ற கட்சியானது மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும். மக்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வருவதே எமது தார்மீக கடமையாகும். தமிழர்களின் குடிப்பரம்பல் மழுங்கி 38 வீதமாக காணப்படுகின்றது. வீகிதாசாரம் குறைந்து விட்டு செல்கின்றது என்று கூறும் நிலைதான் உள்ளது. வேலை வாய்ப்பு தேவை காரணமாக இளைஞர் யுவதிகள் எமது மண்ணை விட்டு செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

எமது இருப்பை எவ்வளவு காலத்திற்குத்தான் பாதுகாக்க முடியும் என்ற கேள்வி எழும் தருணம் இருக்கின்றது. நாங்கள் எமது இருப்பையம், எதிர்காலத்தினையும் பாதுகாக்க வேண்டும் என்றால் பொருளாதார வளர்ச்சியின் மூலமாக மட்டும் எமது மண்ணின் எதிர்காலத்தினை பாதுகாக்க முடியும்.

அரசாங்கம் காலாகாலமாக கிழக்கு மண்ணின் அபிவிருத்தியை அசமந்தப் போக்கிலே விட்டு சென்றது என்ற யதார்த்தத்தினை நாம் அனைவரும் உணர வேண்டும். எமது மண்ணில் மாத்திரம் நீர்ப்பாசனத் துறை உரிய முறையில் இல்லாமல் காணப்படுகின்றது.
எமது விவசாயிகள் நல்ல விளைச்சலை கண்டால் நல்ல விலையை அனுபவிக்க முடியாத நிலையில் தொடர்ந்து காணப்படுகின்றார்கள். நீரினை ஒழுங்கான முறையில் சேமிக்க முடியாத மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்கின்றது. யுத்தத்திற்கு பின்னர் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் எமது மண்ணில் நாற்பதாயிரம் கோடிகளை கொண்டி அபிவிருத்திகளை செய்துள்ளோம் என்று காட்டினார்கள்.

இதில் வெறுமனே கொங்கிறீட் வீதிகள் மற்றும் கட்டடங்கள் மட்டும் தான். அரசாங்கம் மக்களில் மாற்றம் வர வேண்டும் என்று நினைத்திருந்தால் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு மாற்றத்தினை கொண்டு வந்திருக்க முடியும். இங்கு கூறுவார்கள் நாங்கள் தும்புத் தடியை வைத்தால் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும், வாக்கு வங்கிகள் உள்ளது என்றும் கூறுவார்கள். இது எமது மக்களை அவமானப்படுத்தும் செயலினை பல அரசியல் கட்சிகள் முன்னெடுத்து செல்கின்றனர் என்றார்.

மக்கள் முன்னேற்ற கட்சியின் கோறளைப்பற்று பிரதேசத்திற்கான பொறுப்பாளர் ஜோர்ஜ் அழகையா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் கிழக்கு மாகாணத்திற்கான மாவட்ட மற்றும் பிரதேச இணைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment