பொதுமக்களின் மனநிலை மாறாத வரை எம்மால் கட்டுப்படுத்த முடியாது : சொல்வதை கேட்காத மக்கள் வாழ்கின்ற நாட்டிலேதான் நாங்கள் வாழ்கின்றோம் : 150 நாடுகளில் இலங்கையில் மாத்திரம் போராட்டம் நடாத்துகின்றனர் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 22, 2020

பொதுமக்களின் மனநிலை மாறாத வரை எம்மால் கட்டுப்படுத்த முடியாது : சொல்வதை கேட்காத மக்கள் வாழ்கின்ற நாட்டிலேதான் நாங்கள் வாழ்கின்றோம் : 150 நாடுகளில் இலங்கையில் மாத்திரம் போராட்டம் நடாத்துகின்றனர்

சுகாதார அதிகாரிகள் 24 மணி நேரமும் இணைந்து எவ்வாறான தியாகங்களை செய்து பணிபுரிந்தாலும் மக்களிடையே ஒழுங்கு விதிகளை பின்பற்றும் ஒழுக்கம் காணப்படாவிட்டால் ஏனைய நாடுகளைப் போன்று எம்மால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என பொலிஸ் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் பணி புரிகின்ற முறையை இத்தாலி உடனோ, ஏனைய நாடுகளுடனோ ஒப்பிட முடியாது. மக்கள் இதனை கட்டுப்படுத்துவதில் பொடுபோக்காக காணப்படுகின்றனர். எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர மறுக்கின்றனர்.

மைதானங்களில் கிரிக்கெட் விளையாடுவதாக இன்று எனக்கு 20 இற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தன. விளையாட்டின்போது பந்துகளை தொட வேண்டி ஏற்படும் இது இந்நோய் பரவுவதற்கு ஒரு வாய்ப்பாகும் அல்லவா? இது பெற்றோருக்கு ஏன் விளங்குவதில்லை.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதால் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சிறுவர்கள் இணைந்து விளையாடுவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறான மனநிலை உள்ள மக்கள் வாழ்கின்ற சமூகத்தில், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளை விட அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்கு நாம் அதிகமான இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. சொல்வதை கேட்காத அதிகளவான மக்கள் வாழ்கின்ற நாட்டிலேயே தான் நாங்கள் வாழ்கின்றோம். இத்தாலி, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் எம்மை ஒப்பிட முடியாது.

கொரியாவில் அடையாளம் காணப்பட்ட 31 ஆவது நோயாளி செய்த வேலையை தான், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபரும் செய்துள்ளார். அவருக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அதற்கு அவர்கள் பயன்படுத்திய நிலையான சொத்துக்களையும் நாம் சீல் வைக்க உள்ளோம்.

150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவ்வாறு இந்நோய் தொற்றியுள்ள எந்தவொரு நாட்டிலும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டாம் என, போராட்டம் நடத்தவில்லை.

இம்மனித வர்க்கத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனிதர்களுக்கு இவ்வாறான எந்தவொரு நோயும் பரவுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்களா?

மனித வர்க்கத்தின் 30,000 ஆண்டுகள் வரலாற்றில் அவ்வாறான போராட்டம் இடம்பெற்றிருக்கும் என நான் நினைக்கவில்லை. இலங்கையில் இக்காலப்பகுதியில் இரண்டு போராட்டங்கள் இடம்பெற்றன.

அதில் முதலாவது, ஹெந்தலை தொழு நோய் வைத்தியசாலையை தனிமைப்படுத்தல் மையமாக பயன்படுத்துவதற்கு எதிராக, ஏகித்த பகுதியில் மக்கள் போராட்டம் நடாத்தினர். அடுத்தது மட்டக்களப்பில் ஹர்த்தால் நடாத்தினர்.

இந்நோய் பரவாதிருக்க, ஒரு மீற்றருக்கு அப்பால் இருக்க வேண்டும் எதனையும் தொடக்கூடாது அவ்வாறு இருப்பதன் மூலம் இந்நோய் தொற்றாது என, வைத்தியர்கள் மிக தெளிவாக சொல்கின்றனர்.

தொழு நோய் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில் அதில் உள்ள சுவர்களை துளைத்துக் கொண்டு மக்களுக்கு இந்நோய் பரவுமா, அதுவும் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை அல்லாது அவதானிப்பில் வைக்க வேண்டியவர்களையே அங்கு வைக்க நடவடிக்கைக எடுக்கப்பட்டது. அதற்கு போராட்டம் நடாத்தினர்.

இந்த COVID-19 நோய் தொடர்பில் இன்னும் 100 வருடங்களின் பின்னராவது உலக வரலாற்றில் எங்கேனும் கூறுவார்களாயின், இலங்கையில் அதற்கு முதலிடம் வழங்கப்படும். இதற்கு எதிராக செயல்பட்ட இந்து சமுத்திரத்தில் 65,610 சதுர கிலோ மீற்றர் கொண்ட இத்தீவில் உள்ள மக்கள் இதற்கு எதிராக செயற்பட்டனர் என உலக வரலாற்றில் மிக இழிவாக எழுதப்படும்.

அவ்வாறான மனநிலை கொண்ட மக்களுடன் இணைந்து இந்நாட்டில் இத்தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” என அஜித் ரோஹண தெரிவித்தார்.

தினகரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad