சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் 10 கட்சிகள், 18 தொழிற்சங்கம், 20 சிவில் அமைப்புகள் சங்கமம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 2, 2020

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் 10 கட்சிகள், 18 தொழிற்சங்கம், 20 சிவில் அமைப்புகள் சங்கமம்

(ஆர்.விதுஷா)

10 அரசியல் கட்சிகள், 18 தொழிற்சங்கங்கள் மற்றும் 20 சிவில் அமைப்புகளின் சங்கமத்துடன் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி உதயமாகியது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய தலைவர் சிலர் சமூகமளிக்காத நிலையில் புதிய கூட்டணி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்பட்டது.

ஆனால் சின்னம் குறித்து எவ்விதமான அறிப்பும் விடுக்காத நிலையில் கூட்டணியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம் பெற்றது.
'புதிய எதிர்பார்ப்பு புதிய பயணத்தை நோக்கி ஒரே எண்ணத்தில், ஓரே இலக்கில் ஒன்றாய் இணைவோம்' என்ற தொனிப்பொருளில் இடம் பெற்ற இந்த நிகழ்வு சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் ஆம்பமாகியது.

புதிய கூட்டணிக்கான மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்தை தொடர்ந்து பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முன்னிலையில் பிரதான மேடையில் இடம்பெற்றது.

இதன்போது பங்காளி கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என பல தரப்புகள் ஆதரவாளர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதன்போது புதிய கூட்டணியுடன் 10 அரசியல் கட்சிகளும், 20 சிவில் அமைப்புக்களும், 18 தொழில் சங்கங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டன.
அதற்கமைய இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக்க ஹல உறுமய, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அந்த கட்சியின் சட்ட ஆலோசகர் நிஷாம் காரியப்பர் கைச்சாத்திட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் சந்திர குப்தவும், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எஸ். சுபைர்தீன் உள்ளிட்டோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அதற்கு மேலதிகமாக இந்த கூட்டணியில் 20 சிவில் அமைப்புக்கள் அங்கத்துவம் வகிக்கும் நிலையில் தேசிய மக்கள் சபை சார்பில், சமீர பெரேராவும், அப்பி புரவசியோ அமைப்பு சார்பில் இனோக்கா சக்தியங்கனியும் கைச்சாத்திட்டனர்.

மேலும் 18 தொழிற் சங்கங்கள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதேவேளை, தொழிற்சங்கங்கள் சார்பில் சந்திக்க பண்டார புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வின் இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பினரும், ஐக்கிய தேசிய முன்னணியினரும் இந்த கூட்டணியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் அதில் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரவி கருணா நாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இருப்பினும், அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ஜே.சி. அளவத்துவல, சந்திராணி பண்டார, ஏரான் விக்கிரமரத்ன, காமினி ஜெய விக்கிரம பெரேரா, சரத் பொன்சேகா, கபீர் கசீம், எஸ்.எம். மரிக்கார், நளின் பண்டார, சுஜீவ சேனசிங்க, காமினி விஜேவிக்கிரம, வடிவேல் சுரேஷ், தலதா அத்துக்கோரள, கரு பரணவித்தான, திஸ்ஸ அத்தனாயக்க, அஜித் பீ. பெரேரா, ரஞ்சன் ராமனாயக்க, ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, விஜித் விஜேமுனி சொய்சாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

No comments:

Post a Comment