உள்ளுர் பிரச்சினைகளை சர்வதேசத்தின் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசாங்கம் கொண்டு செல்லவில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

உள்ளுர் பிரச்சினைகளை சர்வதேசத்தின் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அரசாங்கம் கொண்டு செல்லவில்லை

(இராஜதுரை ஹஷான்) 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இருந்து இலங்கை விலகுவதால் சர்வதேசத்தில் கொண்டுள்ள நல்லுறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உள்ளுர் பிரச்சினைகளை சர்வதேசத்தின் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கொண்டு செல்லவில்லை என சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

ஜெனிவா பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே சர்வதேச உறவுகள் இராஜங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளில் இருந்து விலகுவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளமை புதிய விடயமல்ல, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மக்களுக்கு இதனையே தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார். 

நாட்டுக்கு எதிராகவுள்ள பிரேரணைகளில் இருந்து முழுமையாக விடுபடுவதாக அவர் பெரும்பாலான மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கை தொடர்பான பிரேரணைகளில் இருந்து விலகும் நிலைப்பாட்டிலேயே இருந்தோம். 

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பயணத் தடை முற்றிலும் ஒருதலைப்பட்சமானது. பயணத் தடை குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிற்கு அறிவுறுத்தியுள்ளோம். 

இராணுவத் தளபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அமெரிக்காவின் செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமானது என்பதை பகிரங்கமாக இராஜதந்திர மட்டத்தில் தெளிவுப்படுத்திள்ளோம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment