இலங்கை படையினரின் யுத்த வெற்றி ஹொலிவூட்டை ஈர்க்கவில்லை, இராணுவத் தளபதிக்கு எதிரான தடை நீதி குறித்த கொள்கைகளிற்கு முரணானது - அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

இலங்கை படையினரின் யுத்த வெற்றி ஹொலிவூட்டை ஈர்க்கவில்லை, இராணுவத் தளபதிக்கு எதிரான தடை நீதி குறித்த கொள்கைகளிற்கு முரணானது - அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர்

குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து இலங்கையின் இராணுவத் தளபதிக்கு எதிராக தடைகளை விதிப்பது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா சர்வதேச சமூகத்தின் அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளாலும் ஆதரிக்கப்படும் இயற்கை நீதிக்கு இது முரணான விடயம் எனவும் தெரிவித்துள்ளார். 

இலங்கையை அதன் இறைமை, பாதுகாப்பு, தேசிய பெருமை ஆகியவற்றை பேண அனுமதிக்கும், அனைத்து நாடுகளுடனும் சமமாக நடக்கும் கௌரவமான அரசாங்கத்தை ஏற்படுத்துவதே இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் நோக்கம் என அமெரிக்காவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா தனது படையினர் குறித்து எப்படி பெருமிதம் கொள்கின்றதோ இலங்கையும் அவ்வாறே தனது படையினர் குறித்து பெருமிதம் அடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 

எங்கள் நாட்டிலும் யுத்த வீரர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ள ரொட்னி பெரேரா அமெரிக்கா உட்பட பல ஜனநாயக நாடுகளைச் சேர்ந்த படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளதுடன் வெறுமனே குற்றச்சாட்டுகளிற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என கேள்வி எழுப்பியுள்ளார். 

எங்கள் யுத்த முயற்சிகள் ஹொலிவுட் திரைப்படங்களில் இடம்பிடிக்கவில்லை என தெரிவித்துள்ள தூதுவர் இலங்கையின் பாதுகாப்பு படையினர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தங்களிற்கு வழங்கிய பணியை நிறைவேற்றி பயங்கரவாதிகளிடமிருந்து எங்களை விடுவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரதமர் ஆகியோரின் கருத்துக்களை நினைவுபடுத்தியுள்ள தூதுவர் அமெரிக்கா தனது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யச் செய்வதற்காக இலங்கை இந்த விவகாரத்தில் தொடர்ந்தும் தீவிர ஈடுபாட்டை வெளிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment