ஜனாதிபதி செயலாளரின் பெயரைக்கூறி அதிகாரிகளுக்கு அழுத்தம் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 13, 2020

ஜனாதிபதி செயலாளரின் பெயரைக்கூறி அதிகாரிகளுக்கு அழுத்தம்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர மற்றும் அரசாங்கத்தின் சில சிரேஷ்ட அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி கடன் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக் கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. 

செயலாளருக்கு இது பற்றிய தகவல் அரசாங்க வங்கியொன்றின் முகாமையாளரின் ஊடாக அறியக் கிடைத்துள்ளது. 

தான் அரச சேவையில் இருந்த காலத்தில் தனிப்பட்ட உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு வங்கிக்கோ அல்லது அரச நிறுவனத்திற்கோ எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை எனவும் வேறு ஒரு நபருக்கு அவ்வாறான ஒத்துழைப்பினை வழங்கவில்லை எனவும் கலாநிதி ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

தான் தற்போது சேவையாற்றும் பதவியிலும் கூட அதன் வரையறைகளை மீறி செயற்படவில்லை என செயலாளர் மேலும் குறிப்பிட்டார். 

இவ்வாறு முறையற்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முயற்சி செய்யும் நபர்களின் அழுத்தங்களுக்கு இலக்காக வேண்டாமென அரசாங்க வங்கிகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளும் கலாநிதி ஜயசுந்தர, அவ்வாறான அழுத்தங்களை, கோரிக்கைகளை நிறைவேற்றும்போது தகுதியற்றதாக கருத்திற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். 

இவ்வாறான சந்தர்ப்பங்கள் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கலாநிதி ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad