தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 670 கிலோகிராம் ஐஸ் (Ice), 156 கிலோகிராம் ஹெரோயின் (Heroin), 12 கிலோகிராம் ஹஷீஷ் (Hashish) என்பன அடங்குகின்றன.
தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 51 பொதிகள் மீட்கப்பட்டன. இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப் பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர்.
இவை உனாகுருவே சாந்த என்ற போதைப் பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் மாத தொடக்கத்தில், 3 படகுகள் மூலம் போதைப் பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து, பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப் பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த 3 படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் பேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர், பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து செயல்படும் தேசிய நடவடிக்கை’ மற்றும் இந்த போதைப் பொருளை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், கடல் வழிகள் வழியாக நாட்டிற்குள் போதைப் பொருள் நுழைவதைத் தடுக்க, பரந்த கடல் எல்லையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை கடற்படை ஆற்றிய முக்கிய பங்கைப் பாராட்டிய பாதுகாப்பு பிரதியமைச்சர், நாட்டில் போதைப் பொருள் பரவுவதை ஒரு தேசிய அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுவதாகவும், போதைப் பொருள் இல்லாத நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு பொதுமக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் நடவடிக்கைகளின் வெற்றிக்கு பெரும் பலம் என்றும், அதற்காக பொதுமக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தேசிய பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருள் உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோத பொருட்களையும் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என்றும், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது, அதை ஆதரிப்பது அல்லது அதை உருவாக்குவது போன்ற எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது என்றும், அத்தகைய கடத்தலை அடக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்துடன் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment