காசா நகரில் தரைவழி படை நடவடிக்கை ஒன்றை ஒட்டி அங்குள்ள சுமார் ஒரு மில்லியன் மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளது ஏற்கனவே பஞ்சத்தாலும் பெரும் அழிவுகளாலும் தவித்து வரும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள குறுகலான கடற்கரையோர பகுதியான அல் மவாசிக்குச் செல்லும்படி காசா நகர மக்களுக்கு இஸ்ரேலியப் படை நேற்று (09) உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே மவாசி பகுதி இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களால் நிரம்பி வழியும் நிலையில் அந்தப் பகுதி ஒட்டு மொத்த காசாவின் வெறும் மூன்று வீத நிலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
அல் மவாசியை ‘மனிதாபிமான வலயம்’ என்று இஸ்ரேல் இராணுவம் கூறுகின்றபோது, அங்கு மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதோடு கடந்த திங்கட்கிழமையும் (08) இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசா நகர் மீது இஸ்ரேலியப் படை கடந்த மாதம் தொடக்கம் உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையிலேயே இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘இந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் கூறுவதை கவனமாக கேட்கும்படி காசா குடியிருப்பாளர்களுக்கு நான் கூறுகிறேன்: அங்கிருந்து வெளியேறும்படி உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது’ என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
காசா நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் வானில் இருந்து, வெளியேறும்படி உத்தரவிட்டு துண்டுப்பிரசுரங்களையும் போட்டது. அண்மைய நாட்களில் இஸ்ரேலியப் படை காசா நகரில் வானளாவிய கட்டடங்களை தகர்க்கும் வகையில் குண்டுகளை வீசி வருகிறது.
இந்த வெளியேற்ற உத்தரவு காசா நகர குடியிருப்பாளர்களை குழப்பமடையச் செய்திருப்பதோடு தப்பிச் செல்வதற்கு எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
தெற்கை நோக்கி வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சிலர் கூறியபோதும் தொடர்ந்து தங்கி இருக்கப்போவதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பாரிய அளவிலான வெளியேற்றம் ஒன்றுக்கான சமிக்ஞை ஒன்று இதுவரை இல்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா நகரில் இடம்பெயர்ந்த புற்றுநோயாளர்கள் வசிக்கும் ஒரு கூடாரப் பகுதியிலும் இந்த அச்சம் பரவியுள்ளது. ‘வடக்கிலோ, தெற்கிலோ எந்த இடமும் இல்லை. நாம் முழுமையாக பொறிக்குள் சிக்கியுள்ளோம்’ என்று அங்கிருக்கும் பஜாஸ் அல் கல்தி என்ற நோயாளர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்வு பலஸ்தீனர்களுக்கு வரலாற்று ரீதியில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட ‘நக்பா’ நிகழ்வை நெதன்யாகு மற்றும் அவரது தீவிர வலதுசாரி அரசு மீண்டும் ஏற்படுத்துவதற்கு முயல்வதாக பலஸ்தீனர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் காசாவின் அதிகப் பெரும்பான்மையான மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வெளியேற்றப்பட்டிருப்பதோடு அந்தப் பகுதி தற்போது வெறும் இடிபாடுகளாக மாற்றப்பட்டு அண்மைய வாரங்களில் பஞ்ச நிலையும் உச்சம் பெற்றுள்ளது.
நேற்று (09) அதிகாலையில் அல் செட்டி அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்திய வான் தாக்குதலில் ஹோசாரி குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளுக்கு கீழ் குறைந்தது 25 பேர் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது.
‘இடிபாடுகளில் இருந்து கூச்சல் சத்தங்கள் கேட்டபோதும் அவர்களை உயிருடன் மீட்பதற்கு போதுமான கனரக உபகரணங்கள் இல்லை’ என்று பலஸ்தீன சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ‘அல் அரபி’ தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்
இதேநேரம் கடந்த மூன்று நாட்களில் இஸ்ரேலியப் படை காசா நகரில் இருக்கும் ஏழு மாடிக்கு மேற்பட்ட கட்டடங்களை தகர்த்து வருவதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கடந்த 72 மணி நேரத்தில் 200க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் இஸ்ரேலால் தகர்க்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் 83 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 223 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 23 மாதங்களை தொட்டிருக்கும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 64,605 ஆக அதிகரித்திருப்பதோடு 163,319 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக காசாவில் உதவி பெறக் காத்திருந்த 37 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலிய படை தொடர்ந்து நடத்தி வரும் இவ்வாறான தாக்குதல்களில் பலியான பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 2,444 ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment