கொழும்பு மாவட்டத்தில் உள்ள நாற்பது வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த அரசாங்க தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதிகளை அடுத்த வருடம் மீள்புனரமைப்புச் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் கடந்த 06ஆம் திகதி கூடியபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேல் பழமையான 45 தொடர்மாடி வீட்டுத் தொகுதிகள் இருப்பதாகவும், இவற்றில் ஏறத்தாழ 10,000 வீடுகள் காணப்படுவதாகவும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
இதற்கமைய, மீள் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள முறைமை மற்றும் ஏற்கனவே உள்ள குடியிருப்பாளர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை ஒரு மாதத்திற்குள் குழுவிடம் வழங்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
மீள்அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ள ஒவ்வொரு வீட்டுத் தொகுதியிலும் முன்னெடுக்கப்பட நடவடிக்கைகள் குறித்து தொழில்நுட்ப மதிப்பாய்வு மற்றும் கட்டட மதிப்பாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, அரச தனியார் கூட்டாண்மையின் அடிப்படையில் மீள் அபிவிருத்திகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, இது தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
அத்துடன், 2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட 45,000 வீடுகள் காணப்படுவதாகவும், இவற்றை மூன்று வருடத்திற்குள் பூர்த்தி செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கூட்டு ஆதனத் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிப்பதன் தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளும்போது காணப்படும் பிரச்சினைகள் குறித்து கூட்டு ஆதனத் துறையில் உள்ள தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உரிய அனுமதிகளை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சுக்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அதனை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தக் கூடிய பொறிமுறையொன்றுக்கான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.
இதேவேளை, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘One Stop Shop’ திட்டத்தை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விஸ்தரிக்கக் கூடியதன் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயுமாறும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு குழு அறிவுறுத்தியது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, ரவீந்திர பண்டார, ஜகத் விதான மற்றும் சட்டத்தரணி கீதா ஹேரத் ஆகியோரும், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை, கூட்டு ஆதனத் துறையில் உள்ள தனியார் நிறுவனங்களின் சம்மேளனம் போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment