அறுகம்பே பகுதியில் இயங்கும் சபாத் இல்லம் தொடர்பில் பொத்துவில் பிரதேச சபை ஊடாக முன்னெடுக்க வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச சபை அமர்வில் சட்டவிரோதமாக இயங்கும் சபாத் இல்லத்தை மூடுவதென தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் கூட இவ்வாறான சபாத் இல்லங்களை மூடுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதமளவில் இது குறித்து ஆராயப்பட்டது. அதனை அவசரமாக முன்னெடுப்பதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகித்து வருகின்றோம்.
இதனிடையே, ஏற்கனவே, வெளிநாட்டு அமைச்சினுடைய வெளிநாடுகளுக்கான பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்ற நிகழ்நிலை கலந்துரையாடலின்போது பொத்துவில் பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் அனைவரும் சட்டவிரோதமாக இயங்கும் சபாத் இல்லம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
சட்டவிரோதமாக இயங்கும் சபாத் இல்லம், பொத்துவிலில் மாத்திரமல்ல கொழும்பு, எல்ல, வெலிகம போன்ற இடங்களில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த சட்டவிரோத சபாத் இல்லம் ஒரு நபரின் பெயரில் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்குவதாகவும் கலந்துரையாடலின்போது வெளிவிவகார அமைச்சின் அதிகாரிக்கள் தெரிவித்தனர்.
ஆனால், இது ஒரு வழிபாட்டுத்தலமாக இருந்தால் கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. எனவே கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் கீழ் மத வழிபாட்டுத்தலம் இயங்க முடியாதெனவும் ஆகவே, இந்த சபாத் இல்லம் சட்டவிரோதமானதெனவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கான பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்ற நிகழ்நிலை கலந்துரையாடலின்போது சட்டவிரோதமாக இயங்கும் சபாத் இல்லத்தை மூடுவதென முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் தற்போது பேசு பொருளாக பொத்துவில் அறுகம்பேயில் இயங்கும் சட்டவிரோத சபாத் இல்லமே உள்ளது.
பொத்துவில் பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் எம்மால் முன்னெடுக்க முடியுமான நடவடிக்கைகளை நாம் முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றோம். பெத்துவில் பிரதேச சபை அதிகாரிகளுடன் இது தொடர்பில் நேற்றுமுன்தினம் (12) சந்தித்து கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தேன்.
இதன்போது, அறுகம்பேயில் இயங்கிவரும் சபாத் இல்லம் அல்லது அவர்கள் தங்கும் இடங்கள் குறித்த ஆவணங்கள் மற்றும் சட்ட ரீதியிலான அங்கீகாரங்கள் தொடர்பில் பரிசீலிக்குமாறு வேண்டியிருக்கிறேன். ஓரிரு தினங்களில் இந்த கோப்பு தயாராகும். அதன் பின்னர், எமது அதிகாரத்திற்குள் நாம் எந்த நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை மேற்கொள்ள நாம் பின்நிற்கப்போவதில்லை.
அத்துடன், எமது அதிகாரத்திற்கு அப்பால் உள்ள விடயங்களில் நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களையும் நாம் பிரயோகிக்கவுள்ளோம் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment