அடுத்த பாராளுமன்ற வாரத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள தேசிய அரச பேரவையின் 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 2437/24 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் 2025.08.07 ஆம் திகதி கூடிய அந்தக் குழுவின் கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னர் விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் சிக்கலான விடயங்களை தவிர்ப்பதற்கு புதிய ஒழுங்கு விதிகளைத் தயாரித்துள்ளதாகவும், பொதுவாக அனைத்து விளையாட்டுச் சங்கங்களினதும் விளையாட்டினதும் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, இதன் மூலம் விளையாட்டுச் சங்கமொன்றின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை வகிக்கும் காலத்தை அதிகபட்சம் 8 வருடங்களுக்கு வரையறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சர்வதேச சங்கங்களின் தரநிலைகளை கருத்திற்கொண்டு இந்தக் காலவரையறை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் சங்கங்களில் நீண்ட காலம் பதவிகளை வகித்துக்கொண்டு மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தொடர்பில் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நிலைமையை தடுப்பதற்கு இது காரணமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், பெண்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டுச் சங்கங்களுக்கு குறைந்தது இரண்டு பெண்கள் பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த ஒழுங்குவிதிகள் மூலம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் புதியதொரு விளையாட்டுக் கலாசாரம் ஏற்படுவதாகவும் விளையாட்டுடன் தொடர்புபட்ட சகல தரப்பினரதும் நேர்மறையான பதில்கள் இதற்குக் கிடைத்துள்ளதாகவும் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதற்கமைய, அவற்றுக்கான தீர்வுகள் வழங்குவது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment