பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல : உலக தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் நெதன்யாகுவை குறிப்பிடலாம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 22, 2025

பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல : உலக தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் நெதன்யாகுவை குறிப்பிடலாம் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் புதன்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியாவுடன் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் எதிர்காலத்தில் எமக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்பதை பகிரங்கமாகவே கூறுகின்றேன்.

ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளோடு இறுதியில் இந்தியா எமக்கு பருப்பு வழங்கியது. பருப்பினை வழங்கி ஜே.ஆர். ஜெயவர்தன தரப்பினரை அச்சுறுத்தி இந்து - லங்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது.

இந்து - லங்கா ஒப்பந்தத்தின் பின்னர் என்ன ஆனது? அதனை நடைமுறைப்படுத்துவதற்காக 13ஆவது அரசியமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாகாண சபை சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக மாகாண சபைகள் செயற்பாட்டில் இல்லை. 2500 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு வேலையின்றி காலத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர்களுக்கான சம்பளம், வாகனம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை அல்ல என்பதே உண்மையாகும்.

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதாயின் எமது நாட்டுக்குள்ளேயே அதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. ஆனால் இந்து - லங்கா ஒப்பந்தம் காரணமாக இன்று தேசிய ஒற்றுமை எட்ட முடியாத ஒரு இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கூடியளவு நிதி வீணாக மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிலைமை எம்மால் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக எமக்கு பிரயோகிக்கப்படும் அழுத்தத்தினால் ஏற்பட்டவையாகும்.

இவற்றை விட மேலும் பல அநீதிகள் எமக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமாகவே எனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டு எனது அரசாங்கம் கலைக்கப்பட்டு கட்சியும் சீரழிக்கப்பட்டது. இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால் யாராலும் அதனை வெளியில் கூற முடியாத நிலைமையே காணப்படுகிறது. தற்போது பிரதான சூத்திரதாரியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள்.

சகல அரசாங்கங்களும், இராணுவத்தினரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சூத்திதாரி எங்கிருக்கின்றார் எனக் கூறினாலும், எம்மால் அவர்களுடன் மோத முடியாது.

சில சக்தி வாய்ந்த உலகத் தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர். அவர்களால் போர் இல்லாமல் வாழ முடியாது. அவர்களுக்கு போர் மனநிலை மாத்திரமே இருக்கிறது. உதாரணமாக, நெதன்யாகுவை குறிப்பிடலாம். அவர் எப்போதும் யாரையாவது தாக்க முயற்சித்துக் கொண்டே இருப்பார்.

போருக்குச் செலவிடப்பட்ட பணம் அனைத்தும் உலகின் ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும்.

25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் சென்றபோது, தெருக்களில் யாசகர்களைப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது, அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். இந்தப் போர் மனநிலைதான் இதற்கு வழிவகுத்தது என்றார்.

No comments:

Post a Comment