சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வழங்கத் தவறியுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான சொத்துக்கள் பற்றிய பொறுப்புக்களை வழங்காதவர்கள் மீதே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களுக்கான விபரங்களை இந்த அதிகாரிகள் வழங்கியிருக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் சகலரும் விபரங்களை ஒப்படைக்கத் தவறியிருந்தனர். இதனால்,கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இவர்களுக்கான கால அவகாசமாக வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலும் சில அதிகாரிகள் சொத்து விபரங்களை கையளிக்கத் தவறியுள்ளனர். இதையடுத்தே இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.
இந்த அதிகாரிகளுக்கு எதிராக 2023/9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் 90 ஆவது சரத்தின் கீழ், வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை கையளிக்கப்படும் மேற்படி சொத்து விபரங்கள் தொடர்பில் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி தண்டப்பணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில் இதுவரை தமது விபரங்களை ஒப்படைக்காத அதிகாரிகள் விரைவாக அதனை தமது நிறுவனத் தலைவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், விதிக்கப்படும் நிர்வாக அபராதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் விபரங்களை நிறுவனத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு அவற்றை நிறுவனத் தலைவர்கள் ஏற்க மறுத்தால், அது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறியத்தருமாறும் அந்த ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment