காசா நகரில் விமானங்கள், டாங்கிகள் மூலம் இஸ்ரேல் குண்டு மழை : 'பேச்சுக்கு' தயாரென ஹமாஸ் அறிவித்திருக்கும் நிலையில் உக்கிர தாக்குதல்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, August 15, 2025

காசா நகரில் விமானங்கள், டாங்கிகள் மூலம் இஸ்ரேல் குண்டு மழை : 'பேச்சுக்கு' தயாரென ஹமாஸ் அறிவித்திருக்கும் நிலையில் உக்கிர தாக்குதல்கள்

காசா நகரின் கிழக்கு பகுதியில் விமானங்கள் மற்றும் டாங்கிகள் மூலம் தொடர்ந்து தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வீடுகளை தரைமட்டமாக்கி இருப்பதோடு புதிய தாக்குதல்களில் அங்கு 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர் நிறுத்தப் பேச்சவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு தயார் என்று ஹமாஸ் அமைப்பு மத்தியஸ்தர்களிடம் குறிப்பிட்டிருக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

செய்தூன் பகுதியில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேலிய டாங்கி நடத்திய செல் குண்டு வீச்சில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 

அதேநேரம் ஷுஜையா புறநகர் பகுதிக்கு அருகே இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசா நகரின் மூன்றாவது புறநகர் பகுதியான துபாவில் இடம்பெற்ற செல் தாக்குதல்களிலேயே எஞ்சிய இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

செய்தூன் பகுதியில் சிக்கியுள்ள குடும்பங்களிடம் இருந்து உதவி கோரி அழைப்புகள் வருவதாக உள்ளூர் சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் தாம் காயமடைந்திருப்பதாகவும் அவர்களில் பலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அந்தப் பகுதியில் அம்புலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘கிழக்கு காசா பகுதியில் குறிப்பாக செய்தூன் மற்றும் ஷெஜையாவில் இடைவிடாது வெடிப்புகள் கேட்ட வண்ணம் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) அங்குள்ள வீடுகளை அழித்து வருகின்றனர். அங்குள்ள நண்பர்கள் எமக்கு இதனை தெரிவித்தார்கள்’ என்று காசா நகரைச் சேர்ந்த 40 வயது இஸ்மைல் என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

‘இரவில் வெடிப்புச் சத்தங்கள் அதிகமாகவும் மற்றும் நெருக்கமாகவும் கேட்பதால் எமது பாதுகாப்புக்கு பிரார்த்தித்து வருகிறோம். நாம் அனைவரும் கொல்லப்படுவதற்கு முன்னர் எகிப்து போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்’ என்று ‘சாட்’ செயலி வழியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

22 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் காசா போரில் அந்தப் பகுதி இடிபாடாக மாறி இருப்பதோடு உதவிகளை இஸ்ரேல் முடக்கி வருவதால் பட்டினி மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் மேலும் நால்வர் ஊட்டச்சத்து குறைபாட்டால் மரணித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று (14) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 2023 ஒக்டோபரில் காசா போர் ஆரம்பித்தது தொடக்கம் பட்டினியால் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 239 ஆக அதிகரித்திருப்பதோடு இவர்களில் 106 பேர் சிறுவர்களாவர்.

மறுபுறம் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 22 பேர் உதவி பெற கூடிய நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் பலியானவர்கள் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் கடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 61,776 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 154,906 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்த நகரை இஸ்ரேலிய படை போரின் ஆரம்பத்தில் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து வாபஸ் பெற்றது. இந்நிலையில் இந்த நகரில் தற்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வசிப்பதாக நம்பப்படுகிறது.

காசா நகரை கைப்பற்றுவதற்கு இஸ்ரேலிய இராணுவத் தளபதி இயல் சமர் ஒப்பதல் அளித்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 80,000 தொடக்கம் 100,000 மேலதிக துருப்புகளை திரட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

இஸ்ரேலின் படை நடவடிக்கை திட்டத்தை தடுக்கும் முயற்சியாக எகிப்து போர் நிறுத்த பேச்சவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முயன்று வருகிறது. ஹமாஸ் பேச்சுவார்த்தை குழு தலைவர் கலீல் அல் ஹய்யா இது தொடர்பில் எகிப்து மத்தியஸ்தர்களுடன் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஹமாஸ் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அவர் கெய்ரோவில் கடந்த புதனன்று மத்தியஸ்தர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக விரிவான உடன்படிக்கை ஒன்றை எட்டவும் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கட்டாரில் முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இழுபறியுடன் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment