இடைத்தரகர்களிடம் கடவுச்சீட்டை வழங்கி சிக்கிக் கொள்ளாதீர் : வலியுறுத்தியுள்ள இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 14, 2025

இடைத்தரகர்களிடம் கடவுச்சீட்டை வழங்கி சிக்கிக் கொள்ளாதீர் : வலியுறுத்தியுள்ள இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்த வருடம் ஹஜ் கடமையை செய்ய எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முகவர் நிறுவனங்களிடம் மாத்திரம் தங்கள் கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்க வேண்டும். இடைத்தரகர்களிடம் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை ஹஜ் பிரயாண முகவர் சங்கத்தின் தலைவர் பீ.எம். கரீம் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து இலங்கை ஹஜ் பிரயாண முகவர் சங்கம்   கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் 2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமைக்கான பணித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. புத்தசாசனம் மற்றும் மத விவகார அமைச்சின் கீீழ் இயங்கும், முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களம் மற்றும் ஹஜ் ஏற்பாட்டுக்குழு  2026ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்கான விரிவான பணித் திட்டத்தை வகுக்க இலங்கை ஹஜ் பிரயாண முகவர் சங்கத்துடன்  கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. இதன்போது  2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஹஜ் குழு முக்கியமான பரிந்துரைகளை வழங்கியிருந்தது.

அதாவது  அடுத்த வருட ஹஜ்  ஏற்பாடுகளை மேற்கொள்ள சவுதி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் ஹாஜிகளுக்கு  மினா மற்றும் அரபாவில் தங்குமிடங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை ஆகஸ்ட் 23ஆ்ம் திகதிக்கு முன்னர் முன்பதிவு  செய்துகொள்ளுமாறு முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. 

ஹஜ் முகவர் நிறுவனங்களே இதனை செய்ய வேண்டியுள்ளன.  என்றாலும் உடனடியாக இதனை செய்ய முடியாத காரணத்தினால் இது தொடர்பாக நாங்கள் முஸ்லிம் கலாசார திணைக்களத்துடன் கலந்துரையாடியதன் மூலம் உள்ளூர் வங்கி மூலம் இதற்கு தேவையான நிதியை மாற்ற தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அதேநேரம் அடுத்த வருடத்துக்கான ஹஜ்  கடமைக்கான நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் பூர்த்தி செய்ய சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர்  நிறுவனங்களும் மக்கா மற்றும் மதீனா இரண்டிலும் ஹோட்டல் முன்பதிவுகளை இறுதி செய்து ஹஜ் திட்டத்திற்கான போக்குவரத்து சேவைகளை முன்பதிவு செய்ய வேண்டும்.

இதேவேளை, முஸ்லிம் மத மற்றும் கலாசார திணைக்களம்  2026 ஆம் ஆண்டிற்கான  ஹஜ் முகவர்களை இதுவரை தெரிவு செய்யவில்லை.. அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படும். அதுவரை அடுத்த வருடம் ஹஜ் கடமைக்கு செல்ல காத்திருப்பவர்கள் தங்கள் கடவுச்சீட்டுக்கள் மற்றும் பணத்தை  கையளிக்க வேண்டாம்.

அதேநேரம் 2026 ஆம் ஆண்டில் ஹஜ் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர் மற்றும் பிற தேவையான விபரங்களை முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் இணையத்தலத்தில்  பதிவு செய்து, அது தொடர்பான தவலை திணைக்களத்துக்கு தெரிவித்து 5,000 ருபா கட்டணம் செலுத்தி டோகன் ஒன்றை பெற்றுக்கொண்டு, புனித யாத்திரைக்கான உங்கள் இடத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன்  பதிவு செய்யப்பட்ட அனைத்து யாத்ரீகர்களும் தங்கள் சொந்த வங்கிக் கணக்கில் 9 இலட்சம் ரூபா ஆரம்பத் தொகையை வைப்பு செய்து, அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஹஜ் முகவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதைத் தயாராக வைத்திருக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்  சில இடைத்தரகர்கள் அல்லது துணை முகவர்கள் முறையான அங்கீகாரம் இல்லாமல் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் சந்தைப்படுத்துகின்றனர். இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் சமய மற்றும்  கலாசார திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருக்கிறோம். அவர்கள் தொடர்பில் யாத்ரீகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். 

முகவர் நிறுவனங்கள் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தால்,  திணைக்களத்தின் 0112 669997 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். 

கடந்த வருடம்  ஹஜ் கடமைக்கு  இலங்கையில் இருந்து 3500 பேர் சென்றிருந்தார்கள். அவர்களுக்கு முகவர் நிறுவனங்களால் செய்துகாெடுக்கப்பட்ட சேவைகள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் முறைப்பாடு செய்ய திணைக்களம் ஜூலை 23ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி இருந்தது. இந்த காலப்பகுதியில் எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை. முகவர் நிறுவனங்கள் சட்ட திட்டங்களை சரியானமுறையில் பின்பற்றியதாலே ஹாஜிகளிடமிருந்து  எந்த  முறைப்பாடு கிடைக்கவில்லை. அடுத்த வருடம் இந்த சட்ட திட்டங்களை மேலும் பலப்படுத்தினால் இதனையும் விட சிறந்த சேவைகளை வழங்க முடியுமாகும்  என்றார்.

No comments:

Post a Comment