அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர்களை குறிவைத்து அப்துல் சத்தார் முஹம்மத் இஸ்மத் என்பவர் வெளியிட்டதாகக் கூறப்படும் அவதூறான, தீங்கிழைக்கும் யூடியூப் பதிவுகளை உடனடியாக நீக்குமாறும் அவரை ஆகஸ்ட் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கொழும்பு முதன்மை நீதிவான் தனுஜா லக்மாலி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு 2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க இணைய பாதுகாப்புச் சட்டத்தின் 24வது பிரிவின் கீழ் உலமா சபை தாக்கல் செய்த மனுவுக்கிணங்க வழங்கப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் இணையத்தில் பரப்பப்படும் தடை செய்யப்பட்ட அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு எதிராக நீதிமன்ற தடுப்பு உத்தரவை கோர முடியும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சிந்தக ரண்கொத்கே மத ரீதியான விரோதம், சமூக மற்றும் மத நிறுவனங்கள் மீது அவதூறுகளையும் சமூகத்துக்கு தீங்கான பதிவுகளையும் குறிப்பிடும் சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாட்டை சட்டமுறைமையில் எதிர்கொள்வதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது நீதி மற்றும் சட்டப் பிரிவுகளைப் பேணி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 2 வரை இஸ்மத் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக, மதச் செயல்பாடுகளை குறிவைத்து பகைமை மற்றும் அவப்பெயரை உருவாக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம் இணைய பாதுகாப்புச் சட்டத்தின் 24(2) பிரிவின் கீழ் சந்தேகநபர் உடனடியாக அவதூறான உள்ளடக்கங்களை அகற்ற வேண்டும் என்றும் 2025 ஆகஸ்ட் 21 அன்று தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் ஆஜராகி உத்தரவுக்கு அமைய நடவடிக்கை எடுத்ததை உறுதிப்படுத்தி, ஏன் தன்மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாதென்பதை விளக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment