அமைச்சர்களுக்கெதிராக மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியும் எனக்கூறுவது பாராளுமன்ற சம்பிரதாயம் அறியாதவர்களின் தர்க்கம் - அஜித் பி பெரேரா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 17, 2025

அமைச்சர்களுக்கெதிராக மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியும் எனக்கூறுவது பாராளுமன்ற சம்பிரதாயம் அறியாதவர்களின் தர்க்கம் - அஜித் பி பெரேரா தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தலையிடக்கூடும் என்ற அடிப்படையிலேயே பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியும் என அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் தர்க்கம் தவறானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தலையிடக்கூடும் என்ற அடிப்படையிலேயே பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களுக்கெதிராக மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடியும் எனக்கூறுவது பாராளுமன்ற சம்பிரதாயம் பற்றி அறியாதவர்களின் தர்க்கமாகும்.

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் நிறைவேற்றதிகாரத்தின் பகுதிகளாகும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்கள் அனைவரும் அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்கு உட்பட்டவர்களாவர். இது நீதிமன்றத் தீர்ப்புக்கள் ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது நிலையியற் கட்டளைகளில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலோ குற்றப்பிரேரணை தொடர்பிலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இலங்கை வரலாற்றில் 1981 இல் அபபோதைய எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டு அது விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. அமைச்சரவை அமைச்சர்கள் அல்லாதவர்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க முடியும் என்பது இதன் ஊடாக தெளிவாகிறது. பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயத்திலும் இந்த நடைமுறை காணப்படுகிறது.

எனவே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு எதிராக மாத்திரமே நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க முடியும் என முன்வைக்கப்படும் வாதம் தவறானதாகும்.

எனவே எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள காரணியை நன்கு ஆராய்ந்து பிரதி அமைச்சர் அந்த பதவியை வகிக்க பொறுத்தமானவரா ? இல்லையா ? என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். அதனை விடுத்து பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் இதனை உள்ளடக்காமல் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது சபாநாயகருக்கு அரசியலமைப்பின் ஊடாக உரித்தாக்கப்பட்டுள்ள பொறுப்பு தட்டிக்கழிக்கப்படுவதாகும். அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கண்டு எதற்காக இவ்வாறு அச்சப்படுகிறது எனத் தெரியவில்லை என்றார்.

No comments:

Post a Comment