இன்று (22) முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமது தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டமை மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று முற்பகல் 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னிலையான ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மிக நீண்ட வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேல் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து அவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதவான் விடுத்துள்ளார்.
இவ்விசாரணைகளுக்கு நடுவே வழக்கு பல்வேறு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாகவும் வழக்கு விசாரணையை முன்னெடுப்பதில் தடங்கல் ஏற்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை வேளையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோரும் நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment