வீழ்ச்சியடைந்திருந்த சட்டத்தின் ஆட்சியை தற்போது நாங்கள் உறுதிப்படுத்தி வருகிறோம். மக்களுக்கு இல்லாமல் போயிருந்த நீதியை, நியாயத்தை இந்த சமூகத்துக்கு வழங்கி வருகிறோம். யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர இந்த அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை. அதனை நாங்கள் செய்து காட்டியிருக்கிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி எம்.பி. சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் இந்த நாடு குற்றவாளிகளின் தேசமாகவும் ஒட்டு மொத்த சமூகமும் வீழ்ச்சியடைந்திருந்தது. அரச பொறிமுறை பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி மக்களுக்கு அரச சேவையை பெற்றுக் கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இவ்வாறான நிலையிலேயே அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது, தேசிய மட்டத்தில் வருமானம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் அதிகரித்துள்ளது. இவ்வாறு பொருளாதார தரவுகளை பார்க்கும்போது அரசாங்கத்தின் 10 மாதங்களில் நாட்டின் பொருளதாார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப எங்களுக்கு முடிந்திருக்கிறது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்தமை எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
மேலும் வீழ்ச்சியடைந்திருந்த சட்டத்தின் ஆட்சியை தற்போது நாங்கள் உறுதிப்படுத்தி வருகிறோம். மக்களுக்கு இல்லாமல் போயிருந்த நீதியை, நியாயத்தை இந்த சமூகத்துக்கு வழங்கி வருகிறோம்.
இன்று தராதரம் இல்லாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக செயற்படுத்தப்படுகிறது. அது பொலிஸ்மா அதிபரா, அமைச்சரா, முன்னாள் ஜனாதிபதியா என்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. அதனால் யார் தவறு செய்தாலும் அவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர இந்த அரசாங்கம் பின்வாகப் போவதில்லை என்பதை தெளிவாக தெரிவிக்கிறோம். நாங்கள் இவ்வாறு செயற்படுத்தி இருக்கிறோம்.
அண்மையில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரின் மனைவி, புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை பிரதி பொலிஸ்மா அதிபர் அறிந்த நிலையில் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறுகிறது. விசாரணையில் அவர் குற்றவாளியாகினால், அவருக்கு எதிராகவும் சட்டம் நிலைநாட்டப்படும்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில் தற்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதனால் சட்டத்தை செயற்படுத்துவது என்பது தராதரம் பார்த்து செயற்படுத்தும் விடயமல்ல, தராதரம் பார்க்கப்படாமல் செயற்படுத்தப்படுவதாகும்.
ஊழல் மோசடி தொடர்பில் பாரியளவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இடம்பெற்ற அநியாயங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனால் நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளிக்கிறோம்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான சாட்சிகள் மறைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த சாட்சிகள் அனைத்தும் மீள எடுக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று கீத்நோயர் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் முடிக்கப்பட்டு, தற்போது சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அது தொடர்பான குற்றப்பிரேரணை விரைவில் வழங்கப்படும்.
ஊடகவியலாளர் எக்னலிகொட கடத்தப்பட்டமை தொடர்பான நீதிமன்ற விசாரணை இடம்பெறுகிறது. அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை நிலைநாட்டுவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோன்று யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையை நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம். அது அவர்களின் உரிமை என்றார்.
No comments:
Post a Comment