அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (29) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இவ்வுத்ரவை வழங்கியுள்ளது.
போதிய நேரடி மற்றும் ஆய்வு ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லாததால் அவரை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதவான் சத்துரிகா டி சில்வா இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.
தெஹிவளை - கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் பெண் ஒருவரின் பயணப் பையில் குறித்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
இதன் உரிமை தொடர்பான விசாரணைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த மே மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடரந்து கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment