(எம்.வை.எம்.சியாம்)
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கம் எமதாகும். இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றும் அவசியமாகும். எனவே இந்த புதிய சட்டத்தை மூன்று மாதங்களில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 1978 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கமே எமதாகும். இந்த சட்டத்தின் ஊடாக ஏற்படக்கூடிய ஆபத்தக்கள் தொடர்பில் நாம் நன்கறிவோம். இந்த சட்டம் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம்.
இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இந்த சட்டம் மூலம் தொடர்பில் செயற்பட்டு வருகிறோம். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு தற்போது அமைச்சரவையினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தற்போது தொடர்ந்தும் கூடுகிறது.
எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, தற்போது நாட்டில் இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமாகும்.
இந்த சட்டத்தில் உள்ள சில விடயங்களை புதிய சட்டத்தில் கொண்டுவர வேண்டும். மூன்று மாதங்களில் இந்த சட்டத்தில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும்.
ஆகஸ்ட் மாத இறுதிப்பகுதி அல்லது செப்டம்பர் மாத ஆரம்பகுதியில் இந்த செயற்பாடுகளை நிறைவு செய்து வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment