போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை குத்தகை அடிப்படையில் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவலை மேயர் ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மோசடி விசாரணை பணியகத்திற்கு கல்கிஸ்ஸை நீதவான் ஏ.டி. சத்துரிகா டி சில்வா இன்று வெள்ளிக்கிழமை (25) இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்தை 3.6 மில்லியன் ரூபாவுக்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பத்திர பதிவு செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக இந்த வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையின்போது கண்டறியப்பட்ட ஆவணங்கள், கொழும்பு மோசடி விசாரணைப் பணியக அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணவர்தன, இந்த வழக்குடன் தொடர்புடைய 35 ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment