(எம்.ஆர்.எம்.வசீம்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தி இருந்தோம். தற்போது மீண்டும் பழைய முறையிலேயே மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு தேசிய மாணவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள எடுத்துள்ள தீர்மானம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், எமக்கு இருக்கும் வைத்தியசாலை வசதிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பயிற்சிகள் வழங்குவது தொடர்பில் சில தீர்மானங்களுக்கு வரவேண்டி ஏற்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களை அழைத்து, நானும் பிரதமரும் கலந்துரையாடி இருந்தேன்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துக்கு தேசிய மாணவர்கள் இதற்கு பல வருடங்களுக்கு முன்பிருந்தே இணைத்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளனர். அதனை நாங்கள் தற்காலிகமாகவே நிறுத்தி இருந்தோம். ஏனெனில் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் நிலையை ஆராய்ந்து பார்க்க வேண்டி இருந்ததுடன் இந்த பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் தொகையை ஆராயவேண்டி இருந்தது.
அதனால் இந்த பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துக்கு தேசிய மாணவர்களை நாங்கள் புதிதாக இணைத்துக் கொள்ளவில்லை. மாறாக கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்களை மீளாய்வு செய்து, மீண்டும் அதன் பிரகாரமே மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment