பெண்களை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுட்ட இளைஞர்கள் : பிலியந்தலை பொலிஸாரால் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, July 27, 2025

பெண்களை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுட்ட இளைஞர்கள் : பிலியந்தலை பொலிஸாரால் இருவர் கைது

பெண்களின் கை பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் நாடு திரும்பியவர் எனவும் மற்றைய இளைஞன் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன் எனவும் தெரியவந்துள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் நபர்களை இலக்கு வைத்து, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை சோதனை செய்யும் விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருவராலும் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில், சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான 5 நவீன கையடக்கத் தொலைபேசிகளும், 15 ஸ்மார்ட் போன்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட போலியான எண் தகடுகள் பொறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், முகத்தை முழுமையாக மறைக்கும் இரண்டு முகக்கவசங்கள், 10,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள், பெண் கைப்பை மற்றும் இரண்டு பெரிய பைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப் பொருளுக்கு அடிமையான குறித்த இளைஞர்கள் ஒரு நாளைக்கு சுமார் 20 பொதி போதைப் பொருட்களை உட்கொள்கின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை பொலிஸார் நடத்திய விசேட தேடுதலின்போதே, 25 மற்றும் 26 வயதுகளையுடைய இந்த இளைஞர்கள் தற்செயலாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த இருவரும் கடந்த 23ஆம் திகதி மாலை பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, போகுந்தர பகுதியில் பொலிஸாரினால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டனர்.

இதன்போது, குறித்த இருவரும் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்ததால் அவர்களை துரத்திச் சென்று, பாதையை தடுத்து பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடுகளில் இருவேறு இலக்கங்கள் காணப்பட்டுள்ளது.

மேலும், இவர்களிடம் ஹெரோயின் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியதில், கடந்த இரண்டு மாதங்களாக இந்த திருட்டுகளில் இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன்படி, பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரல்ல, அதுருகிரிய, தலங்கம மற்றும் பிலியந்தலை போன்ற பொலிஸ் பிரிவுகளில் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்களின் கை பைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் சந்தேகநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட கை பைகளிலிருந்து பணம் மற்றும் மொபைல் போன்களை எடுத்ததன் பின்னர், அந்த பைகளை போல்கொட ஆறு மற்றும் பல்வேறு வனப் பகுதிகளில் தாம் வீசிவிடுவதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment