ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் : போலி தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் வண்டி தொடர்பில் குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 30, 2025

ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் : போலி தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் வண்டி தொடர்பில் குற்றச்சாட்டு

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாக அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் வண்டி தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு சுமார் 4 மாதங்களுக்கு முன்பு விசாரணையைத் தொடங்கியது.

இதற்கமைய அந்த வாகனம் மத்துகம நகரில் பயணிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 19ஆம் திகதி பிற்பகல் அந்தப் பகுதியில் விசேட நடவடிக்கையை முன்னெடுத்த வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு, குறித்த ஜீப் வண்டியையும் அதனை செலுத்திய சந்தேகநபரையும் கைது செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனான ரசிக விதான என்பதுடன், அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஜீப் வண்டி தொடர்பில் ஆராய்ந்தபோது, அது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, தவறான தகவல்களைச் சமர்ப்பித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இந்த சட்டவிரோத செயலில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்ததை சேர்ந்த ஒருவர் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஜகத் விதானவுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தின் பெயரில் இரண்டாவது முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஜீப்பை, அவரது மகன் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரசிக விதான, விசாரணையின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து குறித்த ஜீப் வண்டியை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment