அநாதரவான நிலையில் கைவிடப்பட்ட சிசுக்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்திருப்போர் உடன் அரசாங்கத்துக்கு அறிவிக்க வேண்டுமென சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சர் திருமதி சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.
குருநாகலையில், பிறந்து இரண்டே நாளான சிசுவொன்று வயல் பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் கருத்துரைத்த அமைச்சர் குறிப்பிட்டதாவது, குருநாகல் மாவத்தகம பரகஹதெனிய சிங்கபுர பிரதேச வயலிலிருந்து பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்று மீட்கப்பட்டது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் பிரகாரம் இச்சிசுவை மாவத்தகம பொலிஸார் மீட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட இந்த சிசு, மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. பெற்றோர் இந்தச் சிசுவை வயலில் வீசிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வயல்வெளியில் மீட்கப்பட்ட அந்த சிசுவை முதலில் விவசாயியே அவதானித்தார். அவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான். வீசி எறியப்பட்ட அந்தச் சுசுவை கையிலெடுக்கக்கூட சிலர் தயங்கியிருக்கின்றனர். அந்தளவுக்கு நமது சமூகத்தின் நிலைப்பாடு உள்ளது. அதைத் தவறென்றும் சொல்லிவிட முடியாது. நாட்டின் சட்ட திட்டத்துக்கமைய ஏதேனும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமோ என்ற அச்சமும் இதற்குக் காரணமாகியிருக்கலாம்.
விசேடமாக பொலிஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டி ஏற்படுமே என்ற பயம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவதற்கு முதலாவது காரணம் நாட்டிலுள்ள சட்டம் மற்றும் நிறுவக பொறிமுறை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே. பொதுமக்களுக்கான தொடர்பாடல்களைப் பயன்படுத்தி தெளிவை ஏற்படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை அமைச்சு ஏற்பாடு செய்தது.
சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயலாளர் அடங்கலாக எம்மால் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மீட்கப்பட்ட அந்த சிசு தொடர்பில் சுகாதார அமைச்சு, பொலிஸ் சிறுவர் நலன் விசாரணைப் பிரிவு மற்றும் பிரதேச செயலகப் பிரிவு என்பவற்றினூடாக சிசுவின் எதிர்கால நலனுக்கான நடவடிக்கையை நாம் எடுக்கவுள்ளோம்.
வீதிகளிலோ அல்லது வீடுகளுக்கு அருகாமையிலோ அநாதரவாகக் காணப்படும் சிசுக்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர் தொடர்பில் எமக்கு உடனடியாக அறியத் தரவும். பிரதேச பொலிஸ் நிலையங்கள், சிறுவர் நலன் பிரிவு மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நீங்கள் இதுபற்றி அறிவிக்கலாம்.
இது குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நாம் உடனடி நடவடிக்கை எடுப்போம். சட்டநடவடிக்கைகள் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
No comments:
Post a Comment