புலிகளின் காலத்தில் இல்லாத போதைப் பொருள் ஊடுருவல் தற்போது அதிகரித்துள்ளது : கட்டுப்படுத்துமாறு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தினார் ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Monday, July 28, 2025

புலிகளின் காலத்தில் இல்லாத போதைப் பொருள் ஊடுருவல் தற்போது அதிகரித்துள்ளது : கட்டுப்படுத்துமாறு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தினார் ரவிகரன் எம்.பி

விடுதலைப் புலிகளின் காலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் வன்னிப் பகுதியில் கொடிய உயிர்கொல்லி போதைப் பொருட்களின் ஊடுருவல்கள் இருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தற்போது வன்னிப் பகுதியில் அதிகரித்துள்ள போதைப் பொருள் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் போதைப் பொருள் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் 25.07.2025 அன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்திலேயே குறித் விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கசிப்பு, கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போதைப் பொருள், போதை மாத்திரை உள்ளிட்ட பல உயிர்கொல்லி போதைப் பொருட்கள் வன்னியில் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறு போதைப் பொருட்களின் ஊடுருவல்கள் இருக்கவில்லை. ஆனால் 2009ஆம் ஆண்டின் பிற்பாடு வன்னிப் பகுதிகளில் போதைப் பொருள் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளதால் மிக மோசமான பாதிப்பு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. 

போதைப் பொருள் பாவனையால் அதிகளவானர்கள் உயிரிழந்து வருகின்றனர். பலர் உயிரிழக்கும் நிலையில் காணப்படுகின்றனர். இது தவிர இத்தகைய போதைப் பொருள் பாவனைகளால் பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சமூகச் சீர்கேடான விடயங்களும் அதிகரித்துச்செல்கின்றது.

இந்த உயிர்கொல்லி போதைப் பொருள் ஊடுருவல்களை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு எம்மிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான போதைப் பொருட்களின் பாவனையிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

அந்த வகையில் வன்னியிலுள்ள அனைத்து மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும், அனைத்து பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இத்தகைய சட்டவிரோத உயிர்கொல்லி போதைப் பொருட்களை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு உரிய பாதுகாப்புத் தரப்பினரிடம் நாம் தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

இருப்பினும் இத்தகைய உயிர்கொல்லிப் போதைப் பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதையே காணப்படுகின்றது.

எனவே இந்த உயிர்கொல்லிப் போதைப் பொருட்களின் ஊடுருவர்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் கடந்த கால அரசுகள் செயற்பட்டதைப் போன்றில்லாமல், இந்த அரசு இவ்வாறான போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கரிசனையோடு செயற்பட வேண்டும். 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தாங்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமமெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இதற்குப் பதிலளிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்ததைப்போன்று இத்தகைய உயிர்கொல்லி போதைப் பொருள் ஊடுருவல் பிரச்சினை நாட்டின் பலபாகங்களிலும் காணப்படுகின்றன.

அவ்வாறான கொடிய போதைப் பொருள் ஊடுருவல்களை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு விரைவில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment