சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையிலேயே தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த ரி20 தொடரை இலங்கை அணி 1-2 என இழந்த நிலையில் தரவரிசையில் இலங்கை வீரர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தரவரிசையில் 9 ஆவது இடத்தில் இருந்த மஹீஷ் தீக்ஷன 11 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்காத நிலையில் தனது ஆறாவது இடத்தை தக்க வைத்துள்ளார். அவர் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் இருக்கும் இலங்கையின் ஒரே வீரர் ஆவார்.
ரி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலும் இலங்கை வீரர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரின் மூன்று இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 24 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற குசல் பெரேரா இரண்டு இடங்கள் சரிந்து 11 ஆவது இடத்தில் உள்ளார். குசல் மெண்டிஸும் 15 ஆவது இடத்தில் இருந்து 16 ஆவது இடத்திற்கு சரிந்தார்.
அணித் தலைவர் சரித் அசலங்க 4 இடங்கள் பின்னடைவைச் சந்தித்த நிலையில் 44 ஆவது இடத்தில் உள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் சரித் அசலங்கவால் மூன்று இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 16 ஓட்டங்களையே பெற முடிந்தது.
ஐ.சி.சி. ரி20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் முன்னிலையில் இருக்கும் பத்தும் நிசங்க தனது 7 ஆவது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் அதிகூடிய ஓட்டங்களாக மூன்று போட்டிகளிலும் அவர் 120 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment